வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து ஐந்தாண்டுகள் நிறைவுற்ற நிலையில், அவரது மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம், மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
![]()
|
அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால், ஆணையத்தின் விசாரணை பாதிக்கப்பட்டாலும், தற்போது எய்ம்ஸ் மருத்துவ குழுவை நியமித்து, சாட்சிகள் விசாரணையை மேற்கொள்ளும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால், ௨௦௧௭ செப்டம்பர் ௨௫ல் நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் தற்போது, மேலும் ஐந்து மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரிய பதவியில் இருந்த ஒருவரின் மரணத்தில் சந்தேகம் இருந்தால், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டால் தான், ஆணையம் நியமிக்கப்பட்டதற்கே அர்த்தம் இருக்கும். இல்லையெனில், அதனால் பலனில்லை. ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பதால், ஆறுமுகசாமிக்கு வேண்டுமானால் இனி பொழுது போகும். மற்றபடி பொதுமக்கள், இந்த விஷயத்தை எல்லாம் எப்போதோ நினைவிலிருந்து அகற்றி விட்டனர். புதுப்புது பிரச்னைகள் வரும் போது பழைய பிரச்னைகள் ஓரம் கட்டப்படுவது இயற்கை தானே?
சரி, அப்படியே ஆணையம் தீர விசாரித்து, இன்னும் பல ஆண்டுகள் கழித்து குற்றவாளியை கண்டு பிடிக்கிறது என்றால், அதற்கான தண்டனையை குற்றவாளி அனுபவிக்க, அவர் உயிருடன் இருக்க வேண்டாமா? மண்ணுலக தண்டனையை விண்ணுலகத்தில் சென்றா நிறைவேற்ற முடியும்?
![]()
|
ஆறின கஞ்சி பழங்கஞ்சி; தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதியாகி விடும். எனவே, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள பதவிக்காலத்திற்கு உள்ளாவது, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில், தன் கடைசி மகனை விசு அறிமுகப்படுத்தும் போது, 'இவன் பிளஸ் 2 எழுதினான்; எழுதுகிறான்; எழுதுவான்' என்று கிண்டலாகச் சொல்வார். இதைத் தான் தமிழ் இலக்கணத்தில், 'வினைத்தொகை' என்று சொல்கிறோம்.
இறந்த காலத்தில் துவங்கி, நிகழ் காலத்தில் தொடர்ந்து, எதிர்காலத்திலும் நடக்கும் செயலை அப்படி குறிப்பிடுவர். முன்னர் இந்த வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக ஊறுகாய் இருந்தது. இனி அதை மாற்றி, 'ஆறுமுகசாமி கமிஷன்' என்று சொல்லலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE