பணஜி-''காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, 'மோடி - போபியா' எனப்படும், பிரதமர் நரேந்திர மோடி குறித்த பயம் வந்து உள்ளது. ராகுல் ஒரு அரசியல் சுற்றுலா பயணி,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு பிப்., 14ல் தேர்தல் நடக்க உள்ளது. குடும்ப வாரிசுபணஜிக்கு அருகே நேற்று உள் அரங்கத்திற்குள் நடந்த பிரசார கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:ராகுல் குடும்பத்தினர், கோவாவை ஒரு சுற்றுலா தலமாகவே நினைக்கின்றனர். அவர்கள் கோவாவுக்கு அரசியல் சுற்றுலா பயணியர் போல வந்து செல்வர்.
ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கரின், 'தங்க கோவா' கனவை நிறைவேற்றுவதே, பா.ஜ.,வின் நோக்கம்.தங்க கோவா வேண்டுமா அல்லது குடும்ப - வாரிசு ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தேசியவாத காங்., ஆகியவை இங்கு போட்டியிடுகின்றன. அவை தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ள, தேசிய கட்சி அந்தஸ்துக்காகவே போட்டியிடுகின்றன. அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜ.,வால் மட்டுமே ஸ்திரமான அரசு, வளர்ச்சியை அளிக்க முடியும்.
ஆதரவு
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் ஆதரவு மற்றும் உதவியுடன் இங்கு எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை மக்கள் உணர்ந்துஇருப்பர்.காங்., தலைவர் ராகுலுக்கு, 'போபியா' எனப்படும் ஒரு பொருளை பார்த்தால் பயம் ஏற்படும் வியாதி உள்ளது. அவருக்கு மோடி - போபியா ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்
மணிப்பூரில் தேர்தல் வன்முறைஉத்தர பிரதேசத்தின் கிதோர் மாவட்டத்தின் நங்கலா சாகு கிராமத்தின் மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் முஸ்லிம்கள். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் இருந்து இந்த கிராமத்தினர் பா.ஜ.,வுக்கே ஓட்டளித்து வருகின்றனர். இந்த முறையும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவை விட, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கே தங்கள் ஆதரவு என இந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்
உ.பி., மாநிலம் பிரேசாபாதில் பா.ஜ,, வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்த கட்சி தலைவர் நட்டா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கிருந்த முஸ்லிம் பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
பா.ஜ., ஆளும் மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பா.ஜ., நேற்று அறிவித்துள்ளது. முதல்வர் பீரேன் சிங், ஹெயின்காங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர், பா.ஜ.,வில் இருந்து விலகியுள்ளனர். மாநிலத்தின் பல இடங்களில் பா.ஜ., அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. பல இடங்களில் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன
காங்., ஆளும் பஞ்சாபின் அமிர்தசரசில் நேற்று அளித்த பேட்டியின்போது, ''டில்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்கள் மட்டுமே வைக்க உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் ஆட்சி அமைத்தால், பஞ்சாபிலும் அது செயல்படுத்தப்படும்,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.