பழநி : பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
![]()
|
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
![]()
|
நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவர்களுடைய வாகனங்கள் விற்பனையாகிறது. ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.