வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விமர்சனம் என்ற பெயரில் பொறுப்பில்லாத கருத்துகள் வருகின்றன. பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் குறித்து கவலைப்படுகிறேன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022- 23ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, அது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உற்பத்தி துறையில் வளர்ச்சி பெருகும் போது வேலைவாய்ப்புகள் உருவாகும். பங்கு விலக்கலில் அரசு கொண்டுள்ள கவனத்தை, ஏர் இந்தியா விற்பனை குறிக்கும். வேலைவாயப்புகளை தக்க வைக்கவே, துறைகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. கோவிட் காலகட்டத்தில் மக்கள் மீது எந்த சுமையும் விதிக்கக்கூடாது என பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ரிசர்வ் வங்கி வெயிடுவது மட்டுமே டிஜிட்டல் ரூபாய். அதற்கு வெளியே, அனைத்து தனிநபர்களால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயங்கள் மற்றும் அதனை பரிமாற்றம் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீத வரி விதிக்கிறோம். இதில் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு சதவீத டிடிஎஸ் விதிப்பதன் மூலம், கிரிப்டோ கரன்சி பணப்பரிமாற்றத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் தொடர்பாக ராகுலின் விமர்சனம் குறித்து எழுப்பிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: விமர்சனம் என்ற பெயரில் பொறுப்பற்ற கருத்துகள் வருகின்றன. பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். விமர்சனத்தை ஏற்க தயார். அதற்கு முன்னர், சரியாக தயாராக வரவும். இவ்வாறு அவர் கூறினார்.