சென்னை :'மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை, மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று, அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது' என, முதல்வர் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை. குறிப்பாக, தமிழகத்திற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை.
ஏமாற்றம்
![]()
|
கோதாவரி - பெண்ணாறு - காவிரி நதி நீர் திட்டத்தின் விரிவான அறிக்கை தயார் என அறிவித்திருப்பது, ஆறுதல் அளித்தாலும், அதை செயல்படுத்த, முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டை கூட, பட்ஜெட்டில் காண முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது.
ஏற்கனவே தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட, ராணுவ பெருவழி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால், இத்துறையிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு
உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை, 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்திருப்பது, திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும்
தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில், ஒரு காசு கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தையே காட்டுகிறது.மாநில மூலதன முதலீடுகளுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, மாநிலங்களுக்கு நிபந்தனையின்றி பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் அறிவிப்பு அமைந்திருந்தால், முதலில் வரவேற்று இருப்பேன்.
ஆனால், பல்வேறு நிபந்தனைகளை உருவாக்கி, அந்த நிதி, மாநில அரசுகளுக்கு கிடைக்காதவாறு செய்திருப்பது, எந்த வகையில் உதவும்?
எதிர்பார்ப்பு
'ஒரே நாடு ஒரே பதிவு' என்று, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டத்தை, நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த அறிவிப்பாக இருந்தாலும், மாநில உரிமையை எப்படி பறிப்பது என்பதை மட்டும், மத்திய அரசு கவனத்தில் வைத்து செயல்படுவதை, அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை நிலைமையை எதிர்கொள்ள, மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஜி.எஸ்.டி., வரி இழப்பீட்டுத் தொகை, ஜூன், 30ல் நிறைவடையும் சூழலில், இத்தொகை வழங்குவதை தொடர வேண்டும் என்ற, மாநில அரசுகளின் கோரிக்கையை நிராகரித்திருப்பது, மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது.
மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்து, ஐந்து மாநிலத் தேர்தல் நடக்கும் சூழலில், தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித் தவித்த மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்துள்ளனர். மக்களைப் பற்றி சிந்திக்காத இந்த நிதி நிலை அறிக்கையை, 'மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை' என்று அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.