சென்னை : சென்னை மடிப்பாக்கம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் செல்வம், 48; மடிப்பாக்கம் பகுதி தி.மு.க., செயலராக இருந்தார். பெருங்குடி மண்டலத்தில், இவரது மனைவி சமீனாவுக்கு, 'சீட்' கொடுக்க தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மண்டலத்தில், இதர வார்டுகளில் சீட் வழங்குவதில், செல்வம் தலையீடு இருந்துள்ளது. இவர், நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன் நின்றிருந்த போது, இவருக்கு சால்வை அணிவிப்பது போல வந்த ஆறு பேர் கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த செல்வம், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மடிப்பாக்கம் போலீசார் விசாரித்ததில், வார்டு கவுன்சிலருக்கு சீட் வழங்கியதில் ஏற்பட்ட விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.குற்றவாளிகளை பிடித்த பின், கொலைக்கான முழு விபரமும் தெரியவரும் என, போலீசார் கூறிஉள்ளனர்.