பெரம்பலுார் : ''தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்'' என பா.ஜ. முன்னாள் எம்.பி. விஜயசாந்தி தெரிவித்தார்.
அரியலுார் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். விடுதியில் தங்கிப் படித்த இவர் பூச்சி மருந்து குடித்து ஜன. 19ல் இறந்தார்.மாணவி தற்கொலைக்கு கட்டாய மத மாற்ற முயற்சியே காரணம் எனக் கூறி பா.ஜ. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் மாணவி மரணம் குறித்து பா.ஜ. சார்பில் விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்காக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தியாரே தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. விஜயசாந்தி மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா தாய்வாக் கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவினர் நேற்று மதியம் 1:30 மணியளவில் மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையம் கிராமத்துக்கு வந்து மாணவியின் தந்தை சித்தி தம்பிகள் ஆகியோரிடம் ஒரு மணி நேரம் விசாரித்தனர்.
![]()
|
பின் விஜயசாந்தி கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதம் மாற மாணவி வற்புறுத்தப்பட்டு உள்ளார். அவர் மறுத்ததால் 'டார்ச்சர்' கொடுத்துள்ளனர். அதனாலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மதச்சார்பற்ற கட்சி எனக் கூறி மதத்தின் பெயரில் அரசியல் செய்வது தி.மு.க. தான். இப்பிரச்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் மவுனமாக உள்ளார்; யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்.மாணவியின் தந்தையே தி.மு.க.,காரர் தான். அவருக்கே நியாயம் கிடைக்கவில்லை.
![]()
|
மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகி இதுவரை கைது செய்யப்பட்டவில்லை. மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படா விட்டால் நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும். தமிழக அரசு மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டருடன் சந்திப்பு
பா.ஜ., குழுவினர் நேற்று மாலை, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து, 10 நிமிடங்கள் பேசினர். அப்போது, மாணவி தற்கொலை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை கேட்டறிந்தனர்.