வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணையாறு, பெண்ணையாறு - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கோதாவரி ஆற்றின் உபரி நீரை, காவிரி ஆற்றுக்கு திருப்பும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட உள்ளது. அங்கிருந்து கால்வாய் அமைத்து கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நாகர்ஜுனா சாகர் அணைக்கு நீர் எடுத்து வரப்பட உள்ளது.

இதற்கு மாற்றாக, ஜனம்பேட்டில் இருந்து குழாய் வழியாக, நாகர்ஜுனா சாகர் அணைக்கு நீரை எடுத்து வரும் திட்டமும் உள்ளது. நாகர்ஜுனா சாகர் அணையில் இருந்து, ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோமசீலா அணைக்கு நீர் எடுத்து வருவதற்கு, கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
சோமசீலா அணையில் இருந்து, தமிழகத்திற்கு பாலாற்றின் வழியாக கால்வாய் அமைத்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில், காவிரி ஆற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்று வகையில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த, 1,200 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி, 20 கி.மீ.,க்கு சுரங்க நீர்பாதை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, 60 ஆயிரத்து 361 கோடி ரூபாய் தேவை.
இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 361 கி.மீ.,க்கு கால்வாய் அமைய உள்ளது.இதனால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், பெரம்பலுார் மாவட்டங்கள் பயன் பெறும். இத்திட்டம் தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது. இத்திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் அறிவிப்பை, பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது, தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement