* மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை, 1:32 மணி நேரத்திற்கு நீடித்தது. இது, அவர் தாக்கல் செய்துள்ள நான்காவது பட்ஜெட். 2019ல், 2:17 மணி நேரத்திற்கு அவரின் பட்ஜெட் உரை நீடித்தது. இந்திய வரலாற்றில், அதிக நேரம் பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதி அமைச்சர் என்ற சாதனையை அவர் அப்போது படைத்தார்
* இரண்டாவது முறையாக காகிதமில்லா, 'டிஜிட்டல் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை, 'டேப்லெட்' சாதனத்தை பயன்படுத்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரை நிகழ்த்தினார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட்டை தான், தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பையில் வைத்து, அவர் பார்லிமென்டிற்கு எடுத்து வந்தார்
* குஜராத்தில், சர்வதேச நிதி தீர்ப்பாயம் அமைப்பது குறித்து நிதி அமைச்சர் அறிவித்தபோது, திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் மற்றும் தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர், அதை விமர்சித்து குரல் கொடுத்தனர். 'இது மத்திய பட்ஜெட்டா அல்லது குஜராத்துக்கான பட்ஜெட்டா' என கேள்வி எழுப்பினர்
![]()
|
* பட்ஜெட் உரையில், 'டிஜிட்டல்' என்ற வார்த்தை அதிகபட்சமாக 34 முறை இடம்பெற்றது. 'கேப்பிடல்' 33; 'டாக்ஸ்' 28; 'இன்பிராஸ்டிரக்சர் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்' ஆகிய வார்த்தைகள், 26; 'கஸ்டம்ஸ்' 20; 'அர்பன்' 19; 'எனர்ஜி' 18; 'ஹெல்த்' 17; 'கதிசக்தி' 13; 'பார்மர்ஸ் மற்றும் டெக்னாலஜி' தலா 12 முறையும் உரையில் இடம்பெற்றன
* வழக்கமாக, ஹிந்தி, தமிழ், உருது கவிதை வரிகளை குறிப்பிட்டு பேசும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த முறை மகாபாரத இதிகாசத்தில் இருந்து, 72வது ஸ்லோகத்தை கூறினார். பின், “குடிமக்களின் நலனை உறுதிப்படுத்த தாமதமின்றி மன்னன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்த வேண்டும். தர்மத்தின் வழிநின்று வரி வசூலிக்க வேண்டும்,” என, அதற்கான விளக்கத்தையும் அளித்தார்
* வரி குறைப்பு குறித்து அறிவிக்கப்படாததற்கு, செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “வரி குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடாததற்கு என்னை மன்னியுங்கள். இதற்கு முன், பல முறை வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்,” என்றார்
* பட்ஜெட்டை ராகுல் விமர்சித்தது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், “சமூக வலை தளத்தில் ஏதாவது ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே, ராகுல் ஏதாவது கூறி வருகிறார். பட்ஜெட் குறித்து புரிந்துகொள்ளாமல் அவர் விமர்சித்து உள்ளார்,” என்றார்.
Advertisement