வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், தி.மு.க., பிரமுகரிடம் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.
தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி இடத்தில், சுதர்சன சபா அமைந்துள்ளது. 1927ம் ஆண்டு திறக்கப்பட்ட சபாவில், ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு போன்றவை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
வருவாய் இழப்பு
சபாவை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ராமநாதன், 1991 ஜூலை 7ம் தேதி சபா தலைவரானார். அவரது சகோதரர்களான நாகராஜன் செயலராகவும், குமரவேல் பொருளாளராகவும், மணி பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தனர். சபாவில் நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்தி, அந்த வளாகத்தை மதுபான பார், ஹோட்டல், பேக்கரி, மொபைல் போன் கடைகள் நடத்த உள் வாடகைக்கு விட்டதோடு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் செலுத்தாமல், வருவாய் இழப்பு ஏற்படுத்தினர்.
ஆக்கிரமிப்பு
இது குறித்து, மாநகராட்சி தரப்பில் இருந்து, ராமநாதன் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமநாதன் தரப்பினர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சபா உறுப்பினர்கள் தொடர்பான தகவல் மோசடியாக இருந்ததால், ராமநாதன் மற்றும் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் உத்தரவுப்படி, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள், மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா கட்டடத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, நோட்டீஸ் ஒட்டினர். இதன் தற்போதைய சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய். கடை நடத்தியவர்களுக்கு, பொருட்களை எடுத்துக் கொள்ள, ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.