
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தாயம்மாள் என்ற பெண் தனது கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து நீண்ட காலமாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் சின்னவீரம்பட்டி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்துள்ளது. அப்போது, குழந்தைகள் படிக்க நல்ல வகுப்பறை கட்ட வேண்டியுள்ளது அதற்கு நிதி திரட்டுவதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்ட தாயாம்மாள் ‛ஐயா நான் ஏதாவது கொடுக்கலாமா?' என்று கேட்டுள்ளார். இளநீர் விற்கும் பெண் ஆர்வத்தால் கேட்கிறார் அதிகம் போனால் ஐம்பதோ நுாறோ கொடுக்கப் போகிறார் என்று எண்ணினாலும், அவரது வார்த்தையை அலட்சியப்படுத்தாமல்,‛ நீங்க எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறோம்' என்று கூறியுள்ளனர்.

சிறிது நேரம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு விடு விடுவென வீட்டிற்கு சென்றவர் தனது கணவருடன் கலந்து பேசி தனது நீண்ட கால சேமிப்பான ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து ‛ ஏதோ என்னால் முடிந்தது' என்று சொல்லி பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ஒரு லட்சம் ரூபாயை நிதியாகக் கொடுத்துள்ளார்.இவ்வளவு பெரிய தொகையை இளநீர் விற்கும் தாயாம்மாளிடம் இருந்து எதிர்பாராததால் அங்கு இருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆடிப்போயினர்.தாயாம்மாளையும் அவரது கணவரையும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனது குழந்தைகள் மட்டுமல்லை எனது கணவரும் இந்தப் பள்ளியில்தான் படித்தார், கட்டிடம் நல்லாயிருந்த பிள்ளைகள் நிம்மதியா நல்லா படிப்பாங்கதானே, பல ஏழைக்குழந்தைகள் முன்னேற உதவும் பள்ளிக்கூடம் என்பது என்னைப் பொறுத்தவரை கோயில்தான் ஆகவே அங்கு ஒரு நல்ல பணி நடக்க என்னால் இயன்றதைக் கொடுத்தேன் என்றார்.
இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது ‛மான்கி பாத்' நிகழ்வில் தாயாம்மாளை பற்றிக் குறிப்பிட்டு மனம் திறந்து பாராட்டினார். .தாயாம்மாளுக்கு சொந்தமாக அவரது ஊரில் ஒரு சின்ன நிலம் கூட இல்லை இருந்தும் தனது சேமிப்பை தனக்காக தனது குடும்பத்தினருக்காக வைத்துக்கொள்ளாமல் இளநீர் விற்று சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தில் இந்த அற்புதமான தொண்டை செய்துள்ளார்.இது பலருக்கும் முன்மாதிரியான செயலாகும்.இவரைப் போன்றவர்களால் கல்வி விழிப்புணர்வு பெருகியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதை அடுத்து மாவட்ட கலெக்டர் முதல் கிராம மக்கள் வரை தாயாம்மாளை பாராட்டி வருகின்றனர்,பிரதமர் பாராட்டு தனக்கு பெரிதும் மகிழ்வை தருவதாக குறிப்பிட்ட தாயாம்மாளின் கண்களில் நல்ல காரியம் செய்த மனநிறைவு
-எல்.முருகராஜ்.