மதுராந்தகம் நகராட்சியின் 24 வார்டுகளில், அ.தி.மு.க., 24லிலும் நிற்கிறது. தி.மு.க., 21ல் நிற்கிறது. மற்ற கட்சிகள், அவரவருக்கு கிடைத்த ஆட்களை வைத்து போட்டியிடுகிறது. இதில் தி.மு.க.,வை 21 வார்டுகளில் நேரடியாக எதிர்கொள்ளும் அ.தி.மு.க., வெற்றி பெற பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
காரணம், செங்கல்பட்டு மாவட்டத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்ற ஒரே தொகுதி மதுராந்தகம் சட்டசபை தொகுதி. இங்கு எம்.எல்.ஏ., மரகதம் உள்ளார். நகராட்சியிலும் அவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்காகவும், கூடுதல் வெற்றி பெறவும், மதுராந்தகம் அ.தி.மு.க., நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர்.
![]()
|
எம்.எல்.ஏ., மரகதம், 'தி.மு.க., ஆட்சியின் அவலம், வெற்று வாக்குறுதி, அதன் அராஜக போக்கை மக்களிடம் எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும்' என, கட்சியினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறிப்பாக, 'பொங்கல் பரிசு தொகுப்பு பிரச்னை, குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் போன்ற நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பற்றி பிரசாரம் செய்ய வேண்டும்' என, கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் அடிப்படை தேவைகளான சுத்தமான குடிநீர், சுகாதாரம், கழிவு நீர் பிரச்னை போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் வகுத்து கூறும்படி தெரியப்படுத்துகின்றனர். தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவர்களை கவரவும், அ.தி.மு.க.,வினர் முயற்சித்து வருகின்றனர்.
தி.மு.க., வினரோ, ஸ்டாலின் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஆளுங்கட்சி செல்வாக்கு பற்றி எடுத்துக்கூறி ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக உள்ளனர்.
'கட்சியை அப்புறம் பார்த்துக்கலாம், முதலில் நாம் பேசி முடிவுக்கு வருவோம்' என, நகராட்சியில் போட்டியிடும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த, ஒரே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், தனித்தனியாக 'மீட்டிங்' நடத்தி வருகின்றனர்.
சமூகத்தின் முக்கிய தலைவர்கள் அதில் பங்கேற்பதாகவும், கட்சி தலைமைக்கு தெரியாமல் இந்த சந்திப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது.சந்திப்பில், 'கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இம்முறை நான் ஜெயிக்கிறேன். உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன். அரசு திட்ட பணிகளுக்கு கமிஷன் மற்றும் பிற வசதிகள் செய்து தருகிறேன்' என, ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, முடிவு செய்து வருகின்றனர்.