'மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் இந்தியா உருவானது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உருவான பின் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை' என்ற ரீதியில் லோக்சபாவில் நேற்று முன்தினம் காங். -- எம்.பி. ராகுல் பேசியுள்ளார்.அது தொடர்பாக பா.ஜ. மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி அளித்த சிறப்பு பேட்டி:
இந்தியா என்ற நாடு எப்படி உருவானது அதற்கு யாரெல்லாம் பாடுபட்டு என்னவெல்லாம் செய்தனர் என்ற வரலாறு தெரிந்தவர்கள் யாரும் லோக்சபாவில் இப்படி பேச மாட்டார்கள்.
இந்திய அரசியல் சட்டத்தை முழுமையாக படித்து உணர்ந்தவர்கள் 'இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு' என கூறுவதற்கு வாய்ப்பு இல்லை.
![]()
|
ராகுல் லோக்சபாவில் பேசியது முழுதும் அபத்தத்தின் உச்சம். அவர் இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படாத விஷயங்களை லோக்சபாவில் பேசியபோதே அதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும். பிரதமர் மோடி ஏன் அதை செய்யவில்லை என்பது புரியவில்லை.
ராகுலை பொறுத்தவரை அவருக்கு வரலாறும் தெரியாது; சட்டமும் தெரியாது.
அவர் எதையும் படிக்கவும் மாட்டார்; படித்தவர் கூறினாலும் கேட்கவும் மாட்டார். சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை பேசுவது போல எதையோ லோக்சபாவில் உளறியுள்ளார். இந்தியா உருவான பின்னணி அரசியல் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து விரைவிலேயே அவருக்கு சொல்லி கொடுக்கப்படும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி அதற்கு விளக்கமாக அரசியல் சட்டத்தில் கூறப்படாத விஷயங்களை பேசினர். இன்றளவிலும் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி வருகின்றனர்.
அப்போதே பா.ஜ. தரப்பில் சரியான பதிலடி கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் போனதன் விளைவுதான் இன்றைக்கு பார்லிமென்ட் வரை பிரச்னையை எடுத்து வந்திருக்கின்றனர்.இதே பிரச்னையை ராகுலோ அவரது கட்சி தலைவர்களோ ராஜ்யசபாவில் பேசியிருந்தால் அங்கே உறுப்பினராக இருக்கும் நான் உடனடியாக தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்.
அரசியல் சட்டத்தில் கூறப்படாத ஒரு விஷயத்தை ராகுல் பேசுவதும் பிரிவினைவாதம் தான்.
அவரது பேச்சை கூர்ந்து நோக்கினால் இது புரியும்.ராகுலின் இந்த பிரிவினைவாத பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி சொல்வதும் காங். பதில் நன்றி சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. எப்படியோ விளைவுகள் மோசமாக தான் இருக்க போகின்றன.
இப்படிப்பட்ட பிரிவினைவாத பேச்சு மற்றும் நடவடிக்கைகளுக்காக தான் ஏற்கனவே தமிழகத்தில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது; அதை உணராதவர் அல்ல ஸ்டாலின்.இதை ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே நடந்தது தான் மீண்டும் நடக்கும்.'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கொடுக்க முடியாது என்று துவக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.
ஆனால் அதை விடாப்பிடியாக பிடித்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசு இப்போது அதே பிரச்னையை ராகுல் வாயிலாக பார்லிமென்ட் வரை எடுத்து வந்திருக்கிறது.
நீட் தேர்வு விஷயத்தில் காங். இரட்டை வேடம் போடுவது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதை லோக்சபாவில் ராகுல் பேசிய மறு வினாடியே பா.ஜ. உறுப்பினர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டதாலேயே இப்போது ராகுலும் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க.வும் காங்கிரசும் திட்டமிட்டு மத்திய பா.ஜ. அரசுக்கு எதிராக பார்லிமென்ட் வரை வந்திருப்பதை அறிந்த பின் தொடர்ந்து அதை அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் பா.ஜ. மற்றும் பிரதமர் மோடியின் எதிர்வினைக்காக காத்திருக்கிறேன்.அவர்கள் எதிர்வினையாற்றாத பட்சத்தில் இந்த சாமி களம் இறங்குவேன். அப்போது எல்லாமே அதிரடியாக இருக்கும்.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார். - நமது நிருபர் --