வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு' என்று தமிழக கவர்னரை எச்சரிக்கை செய்திருக்கிறது, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி! 'ஆங்கிலம், தமிழ் மொழிகளை மட்டும் கற்றால் போதும் என்று மாணவர்கள் நினைக்கக் கூடாது. மற்ற மொழிகளையும் கற்றால் தான், அதன் அருமை பெருமைகளை அறிய முடியும்' என்று கவர்னர் ஆர்.என்.ரவி, தன் குடியரசு தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு தான் இந்த எச்சரிக்கை.
நாகாலாந்து கவர்னராக இவர் பணியாற்றிய போது, பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து, சீர்திருத்தங்கள் செய்து புகழ் பெற்றார். அதனால், பிரதமர் மோடிக்கு இவரது சேவை பிடித்துப் போய்விட்டது. தமிழகத்திற்கு இது மாதிரியான, 'ஆக்டிவ்' கவர்னர் தான் வேண்டும் என்று நினைத்து, ஆர்.என்.ரவியை, தமிழக கவர்னராக நியமனம் செய்ய ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தார்; அதன்படி கவர்னராகியுள்ளார்.
ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டதை ஆரம்ப காலத்திலேயே, கடுமையாக எதிர்த்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இவரது நியமனத்தை எதிர்க்காமல், வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். அதன்பின், 'நீட்' தேர்வு ரத்து சம்பந்தமாக தி.மு.க., அரசு இயற்றிய சட்ட மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல், கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது, ஆளும் கட்சி தலைவர்களுக்கு ஏற்கனவே கடுப்பை ஏற்படுத்தி இருந்தது.
![]()
|
இந்நிலையில், தி.மு.க., கடைப்பிடிக்கும் இரு மொழி கொள்கையை, கவர்னர் விமர்சனம் செய்தது, அவர்களின் கடுப்பை மேலும் அதிகரித்து விட்டது. அத்துடன், தி.மு.க.,வின் நாத்திக கொள்கைக்கு வேட்டு வைப்பது போல, கோவில்களின் பெருமையை பற்றி கவர்னர் பேசி இருப்பதும், ஆளும் கட்சி தலைவர்களை, கடுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது. எனவே தான், ஆளும் கட்சியின் கோபத்தை வெளிகாட்டும் வகையிலும், கவர்னரை எச்சரிக்கும் வகையிலும், 'முரசொலி' நாளிதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு எல்லாம், அசரக்கூடிய நபர் அல்ல நம் தமிழக கவர்னர்.
அன்று கருணாநிதிக்கு, கவர்னர் அலெக்சாண்டர் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தாரோ, அதுபோல இன்று கருணாநிதியின் அன்பு மகன் ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி இருப்பார் என்று தாராளமாக நாம் நம்பலாம். தி.மு.க., தலைவர்களின் உருட்டல் மிரட்டல் வேலைகள் எல்லாம், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான தமிழக கவர்னரிடம் பலிக்காது. தமிழக அரசு அதிகாரிகளை சாதாரண வார்டு கவுன்சிலர் மிரட்டி பார்ப்பது போல, கவர்னரை மிரட்டி பார்க்க நினைக்கும் தி.மு.க., தலைவர்களுக்கு, அவர் தக்க பாடம் கற்பிப்பார் என்று நம்புவோமாக.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE