வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், 'நகை கடன் தள்ளுபடி சான்றிதழை அச்சடித்து கொள்ள வேண்டும்.'நடத்தை விதி முடிவுற்ற பின் சான்றிதழ் வழங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும்' என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாக பலரும் புகார்கள் எழுப்பியுள்ளனர்.

தள்ளுபடி
தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்தது. இதற்கான அரசாணை 2021 நவ., 1ல் வெளியிடப்பட்டது.தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன் அடிப்படையில், 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்றும், 35 லட்சம் பேருக்கு கிடைக்காது என்றும் தகவல் வெளியானது.
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நகை கடன் தொடர்பான ஆய்வு பணி முடிந்த நிலையிலும், பயனாளிகளுக்கு நகையும், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படவில்லை. இதனால், பலரும் கடும் அதிருப்தி அடைந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு நேற்று முன்தினம் ஒரு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயாரிக்க, துணை பதிவாளர் தலைமையில், கூட்டுறவு சார் - பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் அல்லது நகர கூட்டுறவு வங்கி பணியாளர் அடங்கிய குழு ஒவ்வொரு சரகத்திற்கும் அமைக்கப்பட வேண்டும்.
பட்டியல்
மேலும், இக்குழு தான் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்த, தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து, சங்கங்களுக்கு வழங்க வேண்டும். பட்டியல்களை, இம்மாதம் 11ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.தள்ளுபடி சான்றிதழின் வடிவம், வாசகம், வண்ணம் மாறாது தேவையான அளவிற்கு அச்சடித்து வைத்து கொள்ளவும்; தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின் தள்ளுபடி சான்று வழங்குவதற்கான நாள், நடைமுறைகள் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கூறியதாவது:நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு 2021ல் வெளியிடப்பட்ட நிலையில், பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தன. அந்த பணிகள், அந்த ஆண்டின் இறுதியில் முடிந்தும், பயனாளிகளிடம் நகைகள் வழங்கவில்லை. பலரும் வங்கிகளுக்கு வந்து நகைகளை கேட்டு தகறாறு செய்தனர். அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
நடவடிக்கை
தற்போது, தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்த சூழலில், 'தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும் தள்ளுபடி சான்று வழங்கப்படும்' உள்ளிட்ட அறிவுறுத்தல்களுடன், கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து திடீரென சுற்றறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இது, வாக்காளர்களிடம் ஆசையை துாண்டுவது போல் உள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.