மருத்துவ கல்வியை தரம் உயர்த்தவே நீட்: ஆதாரங்களுடன் கவர்னர் ரவி விளக்கம்| Dinamalar

மருத்துவ கல்வியை தரம் உயர்த்தவே 'நீட்': ஆதாரங்களுடன் கவர்னர் ரவி விளக்கம்

Updated : பிப் 06, 2022 | Added : பிப் 05, 2022 | கருத்துகள் (94) | |
'நீட் விலக்கு சட்ட முன்வடிவு, மாநில மாணவர்களின் நலன் சார்ந்ததாக இல்லை. எனவே, சட்டமுன்வடிவை சட்டசபையின் மறு ரிசீலனைக்காக அனுப்புகிறேன்' என, கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை, மறு பரிசீலனைக்காக, கவர்னர் ரவி, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு, பிப்., 1ம் தேதி அனுப்பி உள்ளார். சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான
மருத்துவ கல்வி, தரம்,நீட், ஆதாரங்கள்,  கவர்னர் ரவி,  Governor, NEET exam, medical entrance test, ஆளுநர்,கவர்னர், நீட்

'நீட் விலக்கு சட்ட முன்வடிவு, மாநில மாணவர்களின் நலன் சார்ந்ததாக இல்லை. எனவே, சட்டமுன்வடிவை சட்டசபையின் மறு ரிசீலனைக்காக அனுப்புகிறேன்' என, கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.

'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை, மறு பரிசீலனைக்காக, கவர்னர் ரவி, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு, பிப்., 1ம் தேதி அனுப்பி உள்ளார். சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான காரணம் குறித்து, அவர் விரிவாக விளக்கம் அளித்து உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சட்ட முன்வரைவையும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும், தமிழக அரசால் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையையும் கவனமாக பரிசீலித்தேன். சட்ட முன்வரைவுக்கு, உயர்நிலைக் குழு அறிக்கையே அடிப்படையானது என்பது தெளிவு. இந்த அறிக்கையில், ஆதாரமற்ற, மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்கள் பல காணப்படுகின்றன.


latest tamil news
அவற்றில் சில:


* 'நீட்' என்பது திக்கு தெரியாதது
* நீட் என்பது தகுதி நிரலுக்கு எதிரானது. குறை திறன் மாணவர்களை, எம்.பி.பி.எஸ்., அனுமதி பெறச் செய்கிறது. பொருளாதாரம் மற்றும் சமூக வலிமை கொண்ட, குறை திறன் மாணவர்கள், மருத்துவத் துறைக்குள் நுழைய வழிவகுக்கிறது
* மாநில வகை தேர்வுகளோடு ஒப்பிடுகையில், நீட் முழுமையான சிந்தனைத் திறமையையும், உயர்நிலை திறனாக்கத்தையும் குறைக்கிறது
* இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றை நோக்கி, நீட் சாய்கிறது. மாநில வகைத் தேர்வுகளில், அனைத்து வகையான அறிவையும் சோதிப்பதற்கு இருக்கும் அணுகுமுறையில் இருந்து, இது மாறுபடுகிறது.இவ்வாறு அறிக்கையில் உள்ளது.


எதிர்மறை கண்ணோட்டம்


மருத்துவத் துறை என்பது, அறிவியல் உயர் பிரிவு. இதில் தேர்ச்சி பெற, இயற்பியல், வேதியியல், உயிரியல் துறைகளில் கணிசமான அறிவும், தேர்ச்சியும் இருக்க வேண்டும். இதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. இத்தகைய அவசியமான பாடங்களில் கேட்கப்படும் வினாக்களை புறந்தள்ளிவிட்டு, அவற்றை எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்ப்பதும், அனைத்து வகையான அறிவு எனும் விளக்கமற்ற கோட்பாடு ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்துவதும், வினோதமாகவும், தகுதியற்றதாகவும் இருக்கின்றன.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, நீட் தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் படித்தவர்களில், 30 முதல் 38 மாணவர்கள் மட்டுமே, அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பெற்றுள்ளனர்.இது, ஏழை மாணவர்களுக்காக இயங்கும், அரசு பள்ளிகளில் நிலவும் பரிதாபகரமான சூழ்நிலையை காட்டுகிறது.

சமூக நீதிக்கு குறுக்கீடாகத் திகழும், இந்த முக்கியமான தகவல் குறித்து அக்கறை காட்டாமல், அறிக்கையானது தனியான போக்கில் நகர்ந்து, நீட் தேர்வை குற்றம் சாட்டுகிறது.'தனியே பயிற்சி வகுப்புகளில், பயிற்சி பெறும் பணக்கார மாணவர்களுக்கு, நீட் தேர்வு சாதகமாக உள்ளது. ஏழை மாணவர்களால், இப்படிப்பட்ட தனிப் பயிற்சி எடுக்க முடியாது. எனவே, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது' என, அறிக்கை வாதிடுகிறது.அப்படியென்றால், இத்தகைய தனிப் பயிற்சி வகுப்புகள், மாநில வகைத் தேர்வுகளின் முடிவுகளையும் மாற்றி விடுவது குறித்து அறிக்கை ஒன்றுமே கூறவில்லை. இவற்றில் இருந்து, உயர்நிலைக் குழுவின் பாரபட்ச கருத்துக்களை மட்டுமே, அறிக்கை பிரதிபலிப்பது தெரிகிறது.


latest tamil news

விதிமீறல் இல்லை


கிறிஸ்துவ மருத்துவக் கலலுாரி, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு குறித்து, உச்ச நீதிமன்றம் மிக துல்லியமாக ஆராய்ந்துள்ளது. 'நீட்' தேர்வானது எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான, பொது அனுமதி முறைக்கான தகுதித் தேர்வு என, மிக நீண்ட விவாதங்களுக்கு பின், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மருத்துவக் கல்வியை தரம் உயர்த்துவதற்கான வழிவகையே, நீட் தேர்வு. மருத்துவக் கல்வியின் தரம் என்பது, பொது சுகாதார மேம்பாட்டோடு தொடர்புடையது. எனவே, அரசியல் சட்டத்தின், 47வது பிரிவில் காணப்படும், அரசு கொள்கையின் வழிகாட்டு நெறிகளில் உள்ள அரசாங்கக் கடமையை, மேலும் முன்னெடுத்து செல்கிற நடவடிக்கை.

பிரிவு 46 என்பது, பட்டியலினத்தவர், பழங்குடியினர், நலிவடைந்த பிற பிரிவினர் ஆகியோரது கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவது குறித்தும் சிந்திக்கிறது. நீட் என்ற ஒற்றை தேர்வின் வழியே, அவர்களின் தகுதி நிலை பாதுகாக்கப்படுகிறது.

மெதுவாக ஊடுருவி விட்ட, பல்வேறு வகையான தவறான செயல்முறைகளை தவிர்க்கவும், மருத்துவக் கல்வித் துறைக்கு இடையூறு செய்யும் வகையில், கல்லுாரி இடங்களை விற்பதன் வழியாக நிகழ்கிற, பொருளாதார சுரண்டலை தடுக்கவும், இது உதவும்.

பிரிவு '51 ஏ - ஜெ' என்பது, தேசமானது எப்போதும் உயர்நிலை செயல்பாடு மற்றும் சாதனைகளை இயற்றிக் கொண்டே இருக்கும் வகையில், தனி நபரின் அனைத்து நடவடிக்கைகளிலும், உயர் திறன் மற்றும் கூட்டு செயல்பாடு குறித்து கூறுகிறது. இப்படிப்பட்ட உயர்நிலை நோக்கத்திற்கு, தகுதி நிலையை அங்கீகரிப்பது அவசியம். தன் குறிக்கோளை அடைய, ஒவ்வொருவருக்கும் முழுமையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

நீட் தேர்வுக்கான பரிந்துரை என்பது, சம வாய்ப்பு கொடுப்பதும், ஒவ்வொருவரும் கடமையாற்றுவதற்கான சமநிலையை வழங்குவதும் ஆகும். இந்த நெறிமுறைகளில் எந்த விதிமீறலும் இல்லை.


தேசிய நலன்


அரசியல் சட்டத்தின் நெறிவழியிலேயே நீட் திட்டமும் அமைய வேண்டும் என்பதில், கருத்து வேறுபாடு இல்லை. பிரிவு, 46 மற்றும் 47, சமூக நீதி குறித்த தரவுகளையும், குறிப்பாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நலிவுற்ற பிரிவினர் குறித்த தரவுகளை குறிப்பிடுகின்றன.

பொது சுகாதாரம் என்பதும் இவற்றின் அங்கமே ஆகும்.நீட் என்பது தேசிய நலன் சார்ந்தது. சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலன் சார்ந்தது என, உச்ச நீதிமன்றம் கருதியிருக்கும்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது, மாநில அளவில் முறையானதாக இருக்குமா; நாடு முழுமைக்கும் அது அத்தியாவசியமானது மற்றும் பொருத்தமானது என்ற நிலையை மாற்ற முடியுமா?

மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த சட்ட முன்வடிவானது, மாநிலத்தின் மாணவர்களின் நலன் சார்ந்ததாக இல்லை என்று கருதுகிறேன். இது தொடர்பாக, சட்டசபை மேலும் விபரமாக விவாதிக்க வேண்டும். எனவே, இந்திய அரசியல் சட்டப்பிரிவு, 200ன்படி எனக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவல் உரிமை வகையில், சட்டசபையின் மறு பரிசீலனைக்காக, சட்ட முன்வடிவை அனுப்புகிறேன். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார். -அடுத்து என்ன நடக்கும்


சட்டசபையில் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றி, சட்ட மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைக்கலாம். இரண்டாவது முறையாக சட்ட மசோதா அனுப்பப்ட்டால், கவர்னரால் அதை நிராகரிக்கவோ, திருப்பி அனுப்பவோ முடியாது. அவர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்புவார். ஜனாதிபதி ஏதேனும் விளக்கம் பெற விரும்பினால், கவர்னருக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்திருக்க முடியும். அவ்வாறு வைக்கப்பட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. எனவே, நீதிமன்றம் செல்வது குறித்தும், அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X