வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட, 110வது வார்டில், தி.மு.க., சார்பில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு நெருக்கமானவருமான சிற்றரசு போட்டியிடுகிறார்.

அவரே, தி.மு.க.,வின் துணை மேயர் வேட்பாளர் எனவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. சிற்றரசை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் அபிஷேக் ரங்கசாமி மற்றும் பா.ஜ., சார்பில் டாக்டர் ராஜசேகர் போட்டியிடுகின்றனர்.சிற்றரசை வீழ்த்தி, வெற்றிவாகை சூட பா.ஜ., பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இதற்காக அந்த வார்டில் பா.ஜ., வேட்பாளருக்காக பிரசாரம் செய்ய, ஏற்கனவே சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, வாக்காளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த குஷ்புவை களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது, குஷ்பு லண்டனில் உள்ளார். அவர், அடுத்த வாரம் சென்னை வந்ததும், 110வது வார்டில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக, வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.