சென்னை: ‛‛நீட் விலக்கு சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கை அல்ல'' என சட்டசபை சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கும் வகையில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபை துவங்கியதும் சபாநாயகர் அப்பாவு மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னரின் கடிதத்தின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார்.
விமர்சனம் கூடாது
தொடர்ந்து சபாநாயகர் பேசுகையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கை காமாலைக் கண்ணுடன் உள்ளது. இது யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கவர்னரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு கவர்னர் தெரிவித்த காரணங்கள் ஏற்புடையது அல்ல. நீட் தேர்வு தேச நலனை காக்கிறது என கவர்னர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னரன் கடிதம் பொது வெளியில் வெளியிட்டது ஏற்புடையதா? சட்டசபையில் கவர்னரை விமர்சிக்கக்கூடாது. விவாதத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி, கவர்னர் பெயரை குறிப்பிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏழைகளுக்கு பாதிப்பு
பிறகு, நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை ஒளிவு மறைவின்றி நடந்தது. நீட்தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளது. திமுக பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது. சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்த பிறகே ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை வழங்கியது. பொது மக்களின் கருத்தையும் கேட்டது. இந்த குழு பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. . இந்த குழு குறித்த கவர்னரின் கருத்து தவறானது. அது அவமானப்படுத்துவதாக உள்ளது.
இந்த மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்தின்படி சரியானது அல்ல. நீட் தேர்வு தொடர்பான கவர்னரின் மதிப்பீடுகள் தவறானவை. நீட் தேர்வை பல முறை எழுதும் ஏழை மாணவர்களுக்கு தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லாதது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கிறது. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் குறை கூறுவது சரியல்ல.
மாநில அரசின் அதிகாரம்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பியது சரியான அணுகுமுறை அல்ல.
நீட் தேர்வு தனி பயிற்சி முறையை ஊக்குவிக்கிறது. தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது. இதற்கு செலவும் அதிகாக இருக்கிறது.உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சட்டசபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளதாக நீட் தீர்ப்பின் போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
இந்த மசோதா குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் வேல்முருகன், ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.