கோவை: அரசியலில், கூட்டத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறெதற்கும் இல்லை. வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதும் இந்த கூட்டம்தான். இதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் தப்பவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கு ஆள் வேண்டுமா... பேக்கேஜ் முறையில் 'புக்' செய்து விட்டால், வேனில் கொண்டு வந்து இறக்கி விடுகின்றனர்.
![]()
|
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் ஆதரவாளர்களுடன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தாங்கள் போகும் இடங்களில் தங்கள் பலத்தை காண்பிக்க, கூட்டமாக செல்கின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் அந்தந்த கட்சி நிர்வாகிகளே, பிரசாரத்தில் அதிகளவில் பங்கேற்றனர்.இப்போது நடப்பது உள்ளாட்சி தேர்தல் என்பதால், கூட்டம் சேர்க்க ஆட்கள் கிடைப்பது மிகவும் கஷ்டமாகியுள்ளது.இதனால் தேர்தல்களில் கூட்டத்தை சேர்ப்பதற்கென்றே உள்ள, ஏஜன்ட் களை வேட்பாளர்கள் அணுகுகின்றனர். இந்த தேர்தலுக்கு முன்பு வரை, ஒரு கூட்டத்தில் இத்தனை மணி நேரம் பங்கேற்க ஒருவருக்கு இவ்வளவு தொகை, எத்தனை பேர் தேவை என்று கணக்கிட்டு பணம் வாங்கினர். ஒரு படி மேலே போய், இந்த தேர்தலில் 'பேக்கேஜ் சிஸ்டம்' வந்துவிட்டது.
கொரோனா தொற்றால் ஆட்கள் வரவே பயப்படுகின்றனர். இதனால் வேட்பாளர்கள் அதிக பணம் கொடுத்து, ஆட்களை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிக்கு பதில், 'பேக்கேஜ் சிஸ்டம்' வந்துள்ளது.இதன்படி, 10 நாட்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டால் ஒரு நாளைக்கு பத்து ஆண்கள், 15 பெண்கள், 4 மணி நேர பிரசாரத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
![]()
|
பணத்தை முன்னதாகவே ஏஜன்ட்கள் வாங்கி கொள்கின்றனர்.ஒருபோதும் கடன், தவணை கிடையாது. தேர்தலில் நிற்கும் வேட்பாளர் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் பிறகு பணத்தை வாங்கவே முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.
இதில், ஆண்களுக்கு தினமும், 350 ரூபாய், பெண்களுக்கு, 300 ரூபாய், தனியாக சாப்பாட்டு பொட்டலம் கிடைத்து விடும்.இவர்களை அழைத்துச் செல்ல, பிக்கப் வேன் வந்து விடும். பிரசாரம் செய்யும் இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, இவர்களை அனுப்பி வேட்பாளருக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்.
பிரசாரம் முடிந்ததும் இவர்கள் அதே இடத்துக்கு வந்துவிட வேண்டும்.ஒரு 'பேக்கேஜில்' செலவுகள் போக ஏஜன்ட்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் லாபம் வருகிறது. இதுபோன்று கோவை மாநகராட்சியில் மட்டும், 20 ஏஜன்ட்கள் வரை உள்ளனர்.
தேர்தல் முடியும் வரை இவர்கள் படுபிசிதான்.அதேபோன்று, இந்த தேர்தலில் பாண்டுவாத்திய கோஷ்டிக்கும் 'ரேட்' அதிகரித்து விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், 4 மணி நேரத்துக்கு, 6 நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. தற்போது, 2 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு மட்டும், 5,000 ரூபாய் என அதிகரித்து விட்டது.எவ்வளவு பணம் என்றாலும் வாரி வழங்க வேட்பாளர்கள் தயார்; எல்லாம் ஜெயித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற தெம்புதான்!