சென்னை: நீட் தேர்வு விவகாரத்தை சட்ட ரீதியாக அணுக வேண்டும். இதனை சட்ட நுணுக்கங்களுடன் கையாள வேண்டும் என அதிமுக.,வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கும் வகையில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, அதிமுக.,வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அதிமுக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக நாம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை 2வது முறையாக நிறைவேற்றி உள்ளோம். அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தியது அதிமுக.
நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டத்தை முதலில் கொண்டுவந்தது அதிமுக தான். நீட் விலக்கு தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும். என்.எம்.சி.,க்கு எதிராக பார்லியில் முதல் குரல் எழுப்பியது அதிமுக தான். 2018-ல் ஜனாதிபதிக்கு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். நீட் தேர்வு விவகாரத்தை சட்ட ரீதியாக அணுக வேண்டும். இதனை சட்ட நுணுக்கங்களுடன் கையாள வேண்டும்.
சட்ட வல்லுநர்களை கொண்டு மிக கவனமாக நுணுக்கமாக நீட் தேர்வு விவகாரத்தை அணுக வேண்டும். தேர்வுக்கு எதிராக திராவிடக் கட்சிகள் ஒத்த கருத்துடன் இருப்பதால் அரசியலாக்க வேண்டாம். அரசியலை தவிர்த்து, விமர்சனங்களை தவிர்த்து, அவதூறுகளை தவிர்த்து சட்டரீதியில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கான உரிமையை பெற்று தருவதில் அதிமுக எப்போதும் அரசுடன் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகையில், ‛நீட் என்னும் விதையை யார் முதலில் கொண்டுவந்தது? அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. வரலாறை மறைத்துவிட்டு யாரும் பேசக்கூடாது. நீட் விவகாரத்தில் இருவேறு விதமான கருத்து எங்களுக்கு இல்லை. ஆனுால், வெளியில் வேறு விதமான கருத்து எங்களுக்கு எதிராக பரவுகிறது. நீட் விலக்கு பெறுவதில் அதிமுக உறுதுணையாக இருக்கும்,' என்றார்.