புதுடில்லி: காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கே.எப்.சி., நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து விட்டு மன்னிப்பு கோரியுள்ளன.
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பாகிஸ்தான் அலுவலகம்,'' “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்களின்ம் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவித்திருந்தது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், '' ஹூண்டாய் மோட்டார் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தைக்கு உண்மையாக உள்ளது. எங்களது நிறுவனத்திற்கு இந்தியா தான் இரண்டாவது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற முறையில் வெளியிட்ட கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சங் யியூ யோங், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது சமூக வலைதளத்தில் வெளியான கருத்துகளுக்காக நாட்டு மக்களிடமும், இந்திய அரசிடமும் மன்னிப்பு கோரினார்.

பாகிஸ்தானின் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஏற்று கொள்ள முடியாது. அறிக்கை வெளியான பின்னர், தென் கொரியாவில் உள்ள நமது தூதர், ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அறிக்கை கோரினார். சமூக வலைதள பக்கத்திலும் அந்த அறிக்கை நீக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, இந்திய அரசின் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.
இந்திய கே.எப்.சி., மன்னிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த யம் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக கே.எப்.சி., மற்றும் பீசா ஹட் உள்ளன. யம் நிறுவனத்திடம் உரிமம் பெற்று பல்வேறு நாடுகளில் இவ்விரு நிறுவனங்களின் உணவு விடுதிகளும் செயல்படுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுக்கான விற்பனை உரிமம் பெற்றுள்ள நிறுவனம், தங்களது கே.எப்.சி., மற்றும் பீசா ஹட், சமூக ஊடக கணக்குகளில் காஷ்மீர் ஒருமைப்பாடு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் காஷ்மீர் பிரிவினையை தூண்டும் வகையில், காஷ்மீர் மண் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது. நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம் என கூறியிருந்தது.

இதனால் இந்தியாவில் கே.எப்.சி., மற்றும் பீசா ஹட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து இந்திய உரிமம் பெற்ற நிறுவனங்கள் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், 'நாட்டிற்கு வெளியே உள்ள கே.எப்.சி., மற்றும் பீசா ஹட் சமூக ஊடக கணக்குகளில் வெளியாகியிருக்கும் கருத்தை ஆதரிக்கவோ அல்லது உடன்படவோ இல்லை. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்தியாவை மதிக்கிறோம். அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையுடன் சேவை செய்வதற்கு உறுதியாக உள்ளோம்.' என கூறியுள்ளனர்.