சென்னை : ''ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெரம்பூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், மணலி, மாதவரம் பகுதி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:
ஒன்பது மாத தி.மு.க., ஆட்சியில், எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், கொரோனா காலத்திலும் நிவாரண உதவி வழங்கியது, அ.தி.மு.க., அரசு. அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கலுக்கு 2,500 ரூபாய் பரிசு மற்றும் தொகுப்பு பொருள் வழங்கினோம். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரம் காக்க, பல திட்டங்களை கொண்டு வந்தோம்.
விலைவாசியை கட்டுக்குள் வைத்து, சட்டம் ஒழுங்கை காப்பாற்றினோம். இதனால், சென்னைக்கு அ.தி.மு.க., வேட்பாளர் மேயராக வந்தால் தான், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மக்களிடம் எடுபடாதுதி.மு.க., ஆட்சியில் பொங்கல் பொருட்கள் தரமாகவும் இல்லை; அனைவருக்கும் கிடைக்கவும் இல்லை.
ரேஷன் பொருள்களில் தி.மு.க., அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் தொகுப்பை தரமாகவும், ஊழல் இல்லாமலும் கொடுத்தோம். இதனால், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தமிழகம் எப்படி இருந்தது என்பதை எண்ணி பார்த்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
தற்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதை எல்லாம் சரிசெய்யாமல், முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். சைக்கிள் ஓட்டுவது, 'ஜிம்'க்கு செல்வது என, விளம்பர அரசியல் செய்கிறார் ஸ்டாலின். இது மக்களிடம் எடுபடாது.
சென்னை மாநகராட்சி வளர்ச்சி பெற்றுள்ளது என்றால், அதற்கு அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டம் தான் காரணம். தி.மு.க., ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் இல்லாத துறையே இப்போது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இரட்டை வேடம்
பின்னர், எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தை தற்போது பொம்மை முதல்வர் ஆளுகிறார். என்ன செய்வது என்று தெரியாமலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து, 'நீட்' தேர்வு ரத்து என்று அறிவித்தார். அவரது பேச்சை நம்பி, பல மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகாமல் இருந்தனர். இதனால், பல உயிர்கள் போனது தான் மிச்சம். ஏமாற்றுவதில் வல்லவர்கள், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு, 1,000 ரூபாய் தருவதாகவும், சமையல் காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் கொடுப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு; ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு. இரட்டை வேடம் போடுகிற கட்சி தி.மு.க.,
இவ்வாறு அவர் பேசினார்.