பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் வலம் வருகிறது 'ஐ.எஸ்.எஸ்.,' எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம். பன்னாட்டு கூட்டுறவால் கட்டுவிக்கப்பட்ட இந்த மிதக்கும் ஆய்வுக்கூடம், மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய விண்வெளி கலன். பல அறிவியல் மைல்கல்களை எட்ட உதவிய இந்த ஆய்வகத்தின் ஆயுட்காலம் 2030ல் முடிவடைகிறது.
அப்படி முடியும்போது, இனி எந்த நாட்டு விண்வெளி வீரர்களும் பூமியிலிருந்து கிளம்பி அங்கு போகமாட்டார்கள். மாறாக, அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' அதை புவியீர்ப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வீழ்த்தப்போகிறது.
வரும் 2030 வரையுள்ள எட்டு ஆண்டுகளில் பல நாட்டு தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு ஆய்வு செய்ய, ஐ.எஸ்.எஸ்.,சை வாடகைக்கு விடவும் நாசா திட்டமிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் போன்றவை தங்கள் விண்வெளி ஓடத்தை இந்த நிலையத்துடன் இணைத்து, தங்கள் சொந்த ஆய்வகத்தை துவக்கலாம். ஆனால், 2030 வாக்கில் தனியே பிரிந்து, விண்வெளி ஆய்வகத்தை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
அதன் பின் ஐ.எஸ்.எஸ்.,சை ஆளில்லாத புராக்ரஸ் சரக்கு விண்வெளி ஓடங்களை வைத்து, அதன் செலுத்தும் வேகத்தை குறைத்து, பூமிக்கு 280 கி.மீ., உயரத்திற்கு வந்ததும், அந்த நிலையம் அப்படியே பூமியை நோக்கி வேகமாகப் பாயும்; காற்று மண்டலத்தில் ஏற்படும் உராய்வால் தீப்பிடித்து சிதறி, மீதமுள்ள உலோகத் துண்டுகள் தெற்கு பசிபிக் கடலில் விழும். ஆனால், அதற்குள் தனியார் விண்வெளி நிலையங்கள் குறைந்தது நான்காவது செயல்பட துவங்கியிருக்கும் என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.