புதுடில்லி: நாட்டில் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் கூறியதாவது:

கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 மாநிலங்களில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த ஜன.,24ல் தொற்று உறுதியாகும் விகிதம் 20.75 சதவீதமாக இருந்தது. இன்று 4.44 சதவீதமாக உள்ளது. இது தொற்று பரவல் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிடி ஆயோக் அமைப்பின் சுகாதாரப்பிரிவு அதிகாரி விகே பால் கூறியதாவது:
கோவிட் சூழ்நிலை நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால், கேரளா, மிசோரம், ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நமது தடுப்பு முறைகளை கைவிடக்கூடாது. வைரஸ் குறித்து முழுமையாக உலகம் இன்னும் அறிந்திருக்கவில்லை. இதனால், கவனமாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்தும் பெருந்தொற்று குறித்தும் ஏராளமான விஷயங்களை கற்றுள்ளோம்.

ஆனால் வைரஸ் குறித்து உலக நாடுகள் முழுமையாக கற்று கொள்ளாததால், அதனை எதிர்த்து ஒற்றுமையாக போராட வேண்டும். தடுப்பூசி போடுவதிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. எந்த அரசுக்கும் இது கனவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.