வேலுார் :''நீட் தேர்வு தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினால், சனியன் தொலைந்தது என, அவர் இருந்து விடலாம். இல்லையென்றால், தினமும் கவர்னரை திட்டிக் கொண்டே இருப்போம்,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், வேலுாரில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
பிரச்னை
தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில், கொரோனா, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் மக்களின் உயிர் முக்கியம் என்பதால், அந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டன. இதனால், நிர்வாகத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை.
இனிவரும் காலங்களில், மக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.'நீட்' தேர்வு குறித்து, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னரிடம் கொடுத்தால், 234 எம்.எல்.ஏ.,க்கள் முகத்தில் அடித்தார் போல, அதை திருப்பி அனுப்பினார்.
இதனால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, மீண்டும் கவர்னருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பியுள்ளோம். அதை, அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால், சனியன் தொலைந்தது என, அவர் இருந்து விடலாம். இல்லையென்றால், தினமும் கவர்னரை திட்டியபடி இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
![]()
|
ஒருமையில் திட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற, கைத்தறி துறை அமைச்சர் காந்தி அளித்த பேட்டி:
'நீட்' விலக்கு சட்ட மசோதவை ஜனாதிபதிக்கு கவர்னர் தான் அனுப்ப வேண்டும்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், யார் மனதும் நோகாமல் பேசினார். அவர் பேசும்போது, யாரும் குரல் கொடுக்கவில்லை.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, காங்., ஆட்சியில் தான், 'நீட்' தேர்வை எடுத்து வந்ததாக திரும்ப திரும்பக் கூறுகிறார். சரிப்பா, காங்., ஆட்சியில் தான் வந்தது. நாங்க, தி.மு.க., இருந்தோம்ல... கருணாநிதி இருந்தாருல்ல... 'நீட்' தேர்வு
வந்ததா?ஜெயலலிதா வந்தாங்கல்ல... 'நீட்' தேர்வை எடுத்து வந்தாங்களா? அட முட்டாளே, நீ வந்தியே... நீ தானே எடுத்து வந்தே. நீங்களே சொல்லுங்க!
இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் முதல்வர் பழனிசாமியை, அமைச்சர் காந்தி ஒருமையில் பேசியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.