கோவை: அரசியல் காரணங்களுக்காக, ஏழை பெண்கள் பயனடைந்து வந்த, அம்மா இருசக்கர வாகன திட்டம், முடக்கப்பட்டு விட்டது. ஆசை, ஆசையாக இத்திட்டத்துக்கு விண்ணப்பித்த மகளிர் வருத்தம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களுக்கு, முன்மாதிரியாக விளங்கும் வகையில், கடந்த 2018 பிப்., மாதம், வேலைக்கு செல்லும் மகளிருக்கான, அம்மா இருசக்கர வாகன திட்டம் துவங்கப்பட்டது. பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை படித்து, வேலைக்கு செல்பவராக இருந்தாலும், சுய வேலை பார்க்கும் பெண்களும் இத்திட்டத்தில் பயனடையலாம். ஆண்டு வருமானம், ரூ.2.5 லட்சத்திற்குள் இருப்பதோடு, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராக, இருக்க வேண்டும்.ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், விரும்பிய இரு சக்கர வாகனம் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இதன் விலையில், 50 சதவீதம் அல்லது, 25 ஆயிரம் ரூபாய் என, எது குறைவான தொகையோ, அத்தொகை மட்டுமே மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ஏராளமான பெண்கள், சுய உதவிக்குழு மகளிர் பயனடைந்தனர். இம்மானியத்தை நம்பி, சுய தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ஏராளம்.ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின், இத்திட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கடந்த ஆட்சி இறுதியில் விண்ணப்பித்தோருக்கு, ஆவணங்கள் சரிபார்த்தும், வாகனம் பெற ஒப்புதல் அளிக்காததால், பலரும் அரசு அலுவலகங்களுக்கு, அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது.

விண்ணப்பதாரர்கள் சிலர் கூறுகையில், ' சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விண்ணப்பித்தும், ஆட்சி மாற்றம் காரணமாக, மானியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகங்கள், தொடர்ந்து செயல்படுகின்றன. இதுபோல், ஆக்கப்பூர்வமான திட்டங்களை, அரசியல் காரணங்களுக்காக நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்' என்றனர்.
மகளிர் திட்ட அலுவலர்களிடம் கேட்டபோது, 'நலத்திட்டங்களை பொறுத்தவரை, தலைமை செயலகத்தில் இருந்து, நிதி விடுவித்தால்தான், விண்ணப்பதாரர்களுக்கு வழங்க முடியும். 'இதுசார்ந்த அறிவிப்பு வந்தால், தகுதியானோருக்கு அழைப்பு விடுக்கப்படும்' என்றனர்.