புதுடில்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ., ஆட்சி அமைத்ததும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, அன்னிய நேரடி முதலீடு என அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 9.1 சதவீதமாக இருந்தது. அதாவது ரூ.2.12 லட்சம் கோடி மட்டுமே. பா.ஜ., ஆட்சியின்போது உலகளாவிய நிதி நெருக்கடி எங்களைத் தாக்கியது. தொற்றுநோய் தாக்கத்தின்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இழப்பு 9.57 சதவீதமாக இருந்தது. நாங்கள் திட்டத்தை வெளிப்படையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறோம். 7 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது.

2013-14ல் ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்த ஏற்றுமதி, இன்று ரூ.4.7 லட்சம் கோடியாக உள்ளது. 2013-14ல் 275 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அன்னியச் செலாவணி தற்போது 630 பில்லியன் டாலராக உள்ளது. அன்னிய நேரடி முதலீடு அப்போது 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, தற்போது 80 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. உங்களின் (காங்கிரஸ்) முன்னாள் தலைவர், "வறுமை என்றால் உணவு, பணம், பொருள் பற்றாக்குறை என்று அர்த்தமில்லை. தன்னம்பிக்கை இருந்தால் அதை சமாளிக்க முடியும்" என்றார். மேலும், "இது ஒரு மனநிலை" என்றும் கூறினார். நான் அந்த நபருக்கு பெயரிடவில்லை, ஆனால் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.