புதுச்சேரி: புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை ஒரு வாரத்தில் நியமித்திட, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
புதுச்சேரி காலாப்பட்டில், அரசு அம்பேத்கர் சட்டக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு எல்.எல்.பி., (5 ஆண்டு), பி.எல்., (3 ஆண்டு) மற்றும் எம்.எல்., (இரண்டாண்டு) பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.ஆண்டிற்கு 510 பேர் படித்து வருகின்றனர். 15 உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், ஏராளமான சட்ட வல்லுநர்களை உருவாக்கி தந்த இச்சட்டக்கல்லுாரி சமீப காலமாக நிர்வாக சிக்கல் காரணமாக தனது பெருமையை மெல்ல, மெல்ல இழந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், இக்கல்லுாரிக்கு கடந்த 2010ம் ஆண்டு முதல், முதல்வர் பதவி காலியாக உள்ளது. அதேபோன்று, சட்டம் சார்ந்த பாடப் பிரிவிற்கான 17 பேராசிரியர்களில் 7 பேரும், சட்டம் சாராத பாடப் பிரிவிற்கான 4 பேராசிரியர்களில் ஒருவர் மட்டுமே உள்ளனர்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக நுாலகத்திற்கு தீர்ப்பு திரட்டல் புத்தகங்கள் வாங்கப்படவில்லை. இ-நுாலகம் பயனற்று உள்ளது. இதனால், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து, தேர்ச்சி சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
![]()
|
இதுதொடர்பாக அரசிடம் வலியுறுத்தியும், பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனையொட்டி, புதுச்சேரி சட்டக் கல்லுாரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் அரசுக்கு உத்தரவிட வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த சிவில் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனர் சுப்ரமணியன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 30.12.2019ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நேற்று, நீதிபதி முனிந்தரநாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மனோகர், அரசு சார்பில் முஸ்தபா மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் பாரதி ஆகியோர் வாதிட்டனர்.அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள், சட்டக் கல்லுாரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை ஒரு வாரத்திற்குள் நிரப்பிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.