தேர்தல் நடத்தை விதிமீறலா? தள்ளுபடி நகைகளை வழங்கியதால் அதிர்ச்சி!| Dinamalar

தேர்தல் நடத்தை விதிமீறலா? தள்ளுபடி நகைகளை வழங்கியதால் அதிர்ச்சி!

Updated : பிப் 12, 2022 | Added : பிப் 12, 2022 | கருத்துகள் (7) | |
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக, கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி சான்றுகளை, அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 சவரனுக்கு உட்பட்ட நகை

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக, கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி சான்றுகளை, அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது; அக்கட்சி ஆட்சியை பிடித்ததும், கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை நகை கடனை தள்ளுபடி செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.தள்ளுபடி சலுகைகயை பெற, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றிருப்பதாகவும், போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.இதனால், நிலுவையில் உள்ள நகைக் கடன்களை ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டது. அதில் போலி நகைகளை வைத்தும், நகையே அடகு வைக்காமல் கடன் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
கேட்டும் கிடைக்கவில்லை

நகைக் கடன் தள்ளுபடி அரசாணை, நவ., 1ல் வெளியிடப்பட்டது. தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.அதன் அடிப்படையில், நகைக் கடன் பெற்ற மொத்த வாடிக்கையாளர்களில், 5 சவரன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 13.47 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் என்றும்; 35.38 லட்சம் பேருக்கு கிடைக்காது என்றும் தகவல் வெளியானது.நகைக் கடன் ஆய்வு முடிந்து நிபந்தனைக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நகைகள் திரும்ப வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள், வங்கிகளுக்கு சென்று நகைகளை திரும்ப கேட்டும் வழங்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும், 19ல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.
latest tamil news

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் காமாட்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, நேற்று துவக்கி வைத்தார்.latest tamil news

திண்டுக்கல், கள்ளிமந்தையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 5 சவரன் வரை அடமானம் வைத்த, 269 பயனாளிகளுக்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இது, தேர்தல் நடத்தை விதி மீறிய செயலாக கருதப்படுகிறது.சுற்றறிக்கை


இந்நிலையில், மண்டல இணை பதிவாளர்கள், கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறுவோரின் பட்டியலை இறுதி செய்து, நடைமுறைகளுக்கு உட்பட்டு, பயனாளிகளுக்கு நகைககள் மற்றும் தள்ளுபடி சான்றிதழ் வழங்க வேண்டும்.எந்த ஒரு தகுதி பெறாத கடன்தாரருக்கும், தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விட கூடாது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவதால், தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வழங்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் தேர்தல் நடத்தை விதிகள் செயலில் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும் வரை, இத்திட்டம் செயல்படுத்த கூடாது.தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரக பகுதிகளில், நகைகளையும், தள்ளுபடி சான்றுகளையும் வழங்கலாம். நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை, மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும்பட்சத்தில், அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவராக இருக்க கூடாது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களை, இதில் ஈடுபடுத்த கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அதிகாரி விளக்கம்!


திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சி குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரியிடம் கேட்டபோது, 'தேர்தல் விதிகள் நகர்ப்புற பகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஊரக உள்ளாட்சி பகுதியில் விழா நடந்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது' என்றார்.அதே நேரத்தில், மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளில், 'ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கும்போது, ஊரகப் பகுதிகளுக்கும், அதை ஒட்டி 5 கி.மீ., சுற்றளளவில் உள்ள பகுதிகளுக்கும், தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கும்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அதை ஒட்டி 5 கி.மீ., சுற்றளளவில் உள்ள பகுதிகளுக்கும், தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, விழா நடந்த இடத்தில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு இருந்தால், இது முழுமையான தேர்தல் விதிமீறலாகவே கருதப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X