பொங்கலுார்:கடந்த, 10 ஆண்டுகளாக போதிய மழையின்மை, மஞ்சள் விலை சரிந்தது போன்ற காரணங்களால் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த வைகாசி பட்டத்தில் குறைந்த அளவு விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்திருந்தனர்.வைகாசியில் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விவசாயிகள் அறுவடை பணியை துவக்கியுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் வேகவைத்து, வெயிலில் உலர்த்தி சுத்தப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.மஞ்சள் விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக லாபம் தரும் பணப் பயிராக இருந்து வந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அபரிமிதமான உற்பத்தி காரணமாக லட்சக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், விலை பெரிய அளவில் உயரவில்லை. இந்த ஆண்டு மஞ்சள் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. ஆனால் ஒரு குவின்டால் மஞ்சள் சராசரியாக ஏழாயிரம் ரூபாய்க்கு விலை போகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் மஞ்சளுக்கான உற்பத்திச் செலவு பல மடங்கு கூடியுள்ளது. உர விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆட்கள் சம்பளமும் இரட்டிப்பாகியுள்ளது. மஞ்சள் விலை மட்டும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், மஞ்சள் விவசாயம் கைகொடுக்கவில்லை என்றனர்.