பெங்களூரூ-பெங்களூரு சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்ட வழக்கில், மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சசிகலா, இளவரசி உள்ளிட்ட ஆறு பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 2017ல் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ௨௦௨௧ ஜனவரியில் விடுதலையானார்.சிறையில் இருந்தபோது, அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத் துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றஞ்சாட்டினார்.
இதை விசாரித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 'சசிகலா சிறையில் இருந்தபோது, அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை' என அறிக்கை தாக்கல் செய்தது.இதையடுத்து, சசிகலா, இளவரசி, சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, ஆய்வாளர் சுரேஷ், துணை ஆய்வாளர் கஜராஜா ஆகிய ஆறு பேர் மீதும், ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில், நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 11-ல் நேரில் ஆஜராகக்கோரி, சசிகலா, இளவரசி உள்ளிட்ட ஆறு பேருக்கும் 'சம்மன்' அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE