தமிழகத்தில் 'நீட்' தேர்வு  தொடர வேண்டும்!
தமிழகத்தில் 'நீட்' தேர்வு தொடர வேண்டும்!

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தமிழகத்தில் 'நீட்' தேர்வு தொடர வேண்டும்!

Updated : பிப் 14, 2022 | Added : பிப் 14, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2021 செப்., 13ல், 'நீட்' தேர்வில் இருந்து மாநிலத்துக்கு விலக்களிக்க வேண்டும் எனக் கோரி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகள் கோரி வந்தன.கடந்த மாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., நீங்கலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மத்திய

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2021 செப்., 13ல், 'நீட்' தேர்வில் இருந்து மாநிலத்துக்கு விலக்களிக்க வேண்டும் எனக் கோரி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



latest tamil news



மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகள் கோரி வந்தன.கடந்த மாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., நீங்கலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆதரவு கேட்டனர். இந்தப் பின்னணியில், பிப்., 1ல் கவர்னர் ரவி, 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதாவை, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.



அது குறித்து, ராஜ்பவன் பிப்., 3ல் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.அந்தக் குறிப்பில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக, 'நீட்' விலக்கு மசோதா இருப்பதால், சட்டசபை அதை மறு ஆய்வு செய்திடும் வகையில் திருப்பி அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக கவர்னரின் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்த ஏழை மற்றும் சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட்டது.



தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு


'நீட்' தேர்வு வருவதற்கு முன், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த சமயம், 2006 முதல் 2016 வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெறும், 213 பேர் மட்டுமே. ஓராண்டுக்கு சராசரியாக 19 மாணவர்கள். மாநிலத்தின் மொத்த மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கையில் 0.7 சதவீதம். 'நீட்' தேர்வை அறிமுகப்படுத்திய போது, நமது மாநில மாணவர்களின் தேர்ச்சி அளவு குறைவாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம்,



தமிழகத்தில் நீட் தேர்வு வராது என, மாணவர்களிடத்தில் தமிழக அரசியல் கட்சிகள் உருவாக்கிய தவறான எண்ணம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் குறைபாடுகள் தான். 12 ஆண்டுகளாக மாநிலத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படாமல் இருந்தன. அதனால், பிற மாநிலங்களுடன் நமது மாணவர்களால் போட்டியிட முடியவில்லை.கடந்த 2018ம் ஆண்டு பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கத் துவங்கியதும் நிலைமை முன்னேறியது. பின், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வந்த பின், நமது மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர்.



அதனால், கடந்த ஆண்டு தேசிய அளவிலான தேர்ச்சி விகிதத்தை விட தமிழக மாணவர்களின் விகிதம் அதிகமாக இருந்தது. 2019ம் ஆண்டு நடந்த தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, 2020ல் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகமானது.



'நீட்'டால் சமூக நீதி


முதல் முறையாக அதிக அளவில் 30க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், இந்திய அளவில் பிரபலமான மருத்துவக் கல்வி நிறுவனங்களான, 'எய்ம்ஸ்' மற்றும் 'ஜிப்மர்' உள்ளிட்டவற்றில் சேர்ந்தனர்.கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு வாயிலாக, 227 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் மட்டும் சேர்ந்துள்ளனர்.



latest tamil news

மருத்துவப் படிப்பை மட்டும் எடுத்துக் கொண்டால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு போக மீதி உள்ள மொத்த இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே இடம் பெற்றுள்ளனர். எனவே, நீட் தேர்வில் சமூக நீதி இல்லை என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது. உள் நோக்கம் கொண்டது. 2021ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் மருத்துவக் கல்லுாரி சேர்க்கை குறித்த விபரங்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தொடர்ந்து அதிக அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளதைத் தெரிவிக்கின்றன.



ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்


சாதாரண கிராமங்களில், மிகவும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் வசதி குறைவான மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் தமிழ் வழியில் படித்த குழந்தைகள், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மருத்துவக் கல்லுாரிகளில் இடம்பெற்றுள்ளனர்.



* திருவள்ளூர் மாவட்டம், மலைவாழ் மக்கள் பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சினேகா. இவரது தந்தை, சாலை ஓரத்தில் கரும்புச் சாறு விற்கும் கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மழைக் காலங்களில் பாத்திர வியாபாரம் செய்வார்.அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள். சினேகா, மலைவாழ் மக்கள் பிரிவு மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் இடம் பெற்றுள்ளார். குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போகிறார்.



latest tamil news


* வேலுார் மாவட்டம், கணேசபுரத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - வித்யா தம்பதி. இருவரும் குவாரியில் கல் உடைக்கும் கூலி வேலை செய்பவர்கள். மகள் சத்யா மாற்றுத் திறனாளி. பென்னாத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவருக்கு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரியில் சீட் கிடைத்துள்ளது.



* சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த சூரப்பள்ளி சின்னனுார் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கலையரசன். பெற்றோர் தறித் தொழில் செய்பவர்கள். ஆலமத்துார் அரசு பள்ளியில் படித்தார். தற்போது சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் பெற்றுள்ளார்.



* நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த இரு மாணவர்கள். அம்பமூலா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். சாலை மற்றும் இணையதள சேவை முழுமையாக இல்லாத கிராமங்களை சேர்ந்தவர்கள்.அதில் ஒருவர் நிதின். மஞ்சள்மூலா குக்கிராமம். எம்.பி.பி.எஸ்., தேர்வாகி உள்ளார். இன்னொருவர் அனகா. அய்யங்கொல்லி பரிவாரம் பகுதி. தந்தை சிறு விவசாயி. தாய் 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். அனகா பல் மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகி உள்ளார்.



* திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி - பார்வதி தம்பதியின் மகள் அனுஷா. பெரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள்.பயிற்சி மையம் எங்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே தேர்வுக்குத் தயார் செய்தார். தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் பெற்றுள்ளார்.



* திருவண்ணாமலை கூலித் தொழிலாளி மகன் பிரகாஷ் ராஜ். மாநில தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லுாரியைத் தெர்வு செய்துள்ளார்.



* மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த நான்கு மாணவியர் தீபஸ்ரீ, வினோதினி, சங்கீதா, கவுசல்யா. முதல் மூன்று பேர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கும் மற்றவர் பல் மருத்துவப் படிப்புக்கும் தேர்வாகி உள்ளனர்.



* பின்தங்கிய மாவட்டமான புதுக்கோட்டையில் இருந்து, 31 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிகமாக, சேலம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சியாகி உள்ளனர்.



மேற்குறிப்பிட்ட மாணவர்கள் மிகச் சாதாரண மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களில், பள்ளிப் படிப்பு கூட முடிக்காதவர்களே அதிகம் உள்ளனர். போதுமான பொருளாதார பின்னணி இல்லை.அவர்களில் பலர் முதல் முறையாக, 'நீட்' தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பயிற்சி வகுப்புகளுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து படித்தவர்கள் பலர் உள்ளனர். முழுக்க தமிழ் வழியிலேயே கல்வி கற்றவர்களும் உள்ளனர்.அவர்கள் எல்லாம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரிய மருத்துவக் கல்லுாரிகளில் படித்து, முதல் தலைமுறை பட்டதாரி ஆகப் போகின்றனர். இது, தற்போதைய தேர்வு முறையால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் வைத்து தேர்வு நடந்த காலங்களில், இது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விஷயம்.



அரசியல் தலையீடு கூடாது


தற்போதைய இந்த தேர்வு முறை, சமூக நீதிக்கு எதிரானது என்றால் வேறு எது சமூக நீதி? தமிழகத்தில் காமராஜர் அதிக அளவில் பள்ளிகளைத் திறந்து, கிராமப்புற ஏழை மாணவர்கள் படிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்பின், தற்போதைய நீட் தேர்வு முறை, ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.



மக்களாட்சியின் நோக்கமே, ஏழை மக்களை முன்னேற்றுவது தான். அந்தப் பணியை தற்போது நீட் தேர்வு முறை செய்து வருகிறது. கல்வித் துறையில் அரசியல் தலையீடு ஆபத்தானது. துரதிர்ஷ்டவசமாக தமிழக கல்வித் துறையில் அரசியலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்களின் நலனை விட சொந்த விருப்பு, வெறுப்புகளே அரசின் முடிவுகளுக்குக் காரணமாக உள்ளன. இந்தப் போக்கு உடனே நிறுத்தப்பட வேண்டும்.



'நீட்' தேர்வு தற்போது நாடு முழுதும் நடைமுறையில் உள்ளது. நாட்டின் மாநிலங்கள் பலவற்றிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மத்தியிலும், பல மாநிலங்களிலும் பா.ஜ., கட்சி தனியாகவும், கூட்டணி அமைத்தும் ஆட்சி செய்து வருகிறது.அவற்றைத் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ், திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்., காங்., பிஜு ஜனதா தளம், சிவசேனா-, தேசியவாத காங்., என வெவ்வேறு கட்சிகள், தனியாகவும், கூட்டணியாகவும் ஆட்சி நடத்தி வருகின்றன.



அந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பின்னணிகளையும், கொள்கைகளையும் கொண்டவை. ஆனால் அவை எல்லாம் 'நீட்' தேர்வை ஏற்று, தமது மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.அப்படி இருக்கும்போது இங்குள்ள திராவிட கட்சிகள் மட்டும், குறிப்பாக தி.மு.க., தமது கூட்டணிக் கட்சிகளோடு அதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.



அதே சமயம், தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி வருகின்றன.கல்வித் துறையில் முன்னேறிய தமிழகத்தில், ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இதுவரை மறுக்கப்பட்டு வந்துள்ளது. அந்த நிலை மாற வேண்டும். எனவே தமிழகத்திலும் 'நீட்' தேர்வு தொடர வேண்டும்.



- பேராசிரியர், கனகசபாபதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (29)

sankaseshan - mumbai,இந்தியா
14-பிப்-202220:03:47 IST Report Abuse
sankaseshan ஹிந்து பத்திரிகை என்றால் கொம்பனோ ? சீனாவுக்கு வால்பிடிக்கும் வெட்கமில்லாத தேச துரோகிகள்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
14-பிப்-202217:39:30 IST Report Abuse
Samathuvan கருத்துரிமை என்பது அதை கட்டாந்தரையில் செட்டப்பு செய்தது போட்ட குடிமகனுக்கும் இருந்ததே அது போல.
Rate this:
Cancel
Ramanathan -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-202217:01:45 IST Report Abuse
Ramanathan நீட் தேர்வினால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதியும் உழைப்பும் உள்ள மாணவர்கள் மருத்துவக்கல்வி வாய்ப்பும் பெறுகிறார்கள் என்பது உண்மை. சமூக நீதி என்ற பெயரில் தகுதியற்ற பணம் கொழிக்கும் மாணவர்களிடம் கறந்து கொழுத்துக்கொண்டிருந்த தனியார் திமுக கல்வித்தந்தைகள் நீட் தேர்வு வந்ததால் கழிக்க முடியவில்லை. அவர்களுடைய தூண்டுதலினால் தான் அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X