சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த கட்ட விசாரணையை, விரைவில் துவக்க உள்ளது.ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017ம் ஆண்டு செப்., 25ம் தேதி கமிஷன் அமைக்கப்பட்டது.
அனுமதி
விசாரணை கமிஷன் சார்பில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என, 154 பேரிடம், விசாரணை நடந்தது.
அப்போது, மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவமனை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்த தில், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து, கமிஷன் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து, விசாரணையை துவங்குவதற்கு வசதியாக, மருத்துவர்கள் குழுவை நியமிக்கும்படி, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு, ஆறுமுகசாமி கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது.
![]()
|
ஆலோசனைக் கூட்டம்
அதை ஏற்று, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்த கட்ட விசாரணையை துவக்குவது தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இதில், எய்ம்ஸ் மருத்துவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பங்கேற்க உள்ளனர்.அதன்பின், விசாரணைக்கு வரவழைக்க வேண்டியவர்களுக்கு, 'சம்மன்' அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. எனவே, விரைவில் அடுத்த கட்ட விசாரணை துவங்கும் என, கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.