நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 19ம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் முடியும் நிலையில், கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கு இடையில், பரிசு பொருட்கள், பண வினியோகம் என, வாக்காளர்களுக்கு வாரி இறைக்க, வேட்பாளர்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றனர். சில சுயேச்சை வேட்பாளர்களும், கட்சிகள் பார்முலாவை பின்பற்றுகின்றனர். பணப்பட்டுவாடா, பரிசு வினியோகத்தை தடுக்க, பறக்கும் படையினர் போலீசாருடன் தீவிரமாக ரோந்து சுற்றுகின்றனர். அவர்கள், கண்ணில் மண்ணை துாவி, பட்டுவாடாவை கச்சிதமாக செய்து முடிக்கின்றனர்.வீட்டில் சென்று பட்டு வாடா செய்யும் போது பறக்கும் படையினரிடம் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்து, வாக்காளர்களை, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு வரவழைத்து, பணப்பட்டுவாடா செய்கின்றனர்.
துண்டு பிரசுரம்
இது குறித்து, கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது தெரியவந்ததாவது: ஏற்கனவே, 1,000 முதல் 1,500 ஓட்டுக்கு, 20 பாக முகவர்கள் நியமித்துள்ளனர்.இவர்களில், ஒரு நபர், பூத் சிலிப், துண்டு பிரசுரம் வழங்குவது போல், வீடுகளுக்கு சென்று, 19ம் தேதி ஓட்டு போடும் நபர்களை உறுதி செய்வார். அப்போதே, பணம் வேண்டுமா அல்லது பரிசு பொருள் வேண்டுமா என கேட்பார். வாக்காளர்கள் விருப்பத்தை பொறுத்து, பணம் வேண்டுமென்றால், ஒரு வீட்டில் ஒரு நபரை, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தெருவுக்கு செல்லும் படி கூறுவார். அடையாள குறியீடாக, வாக்காளரிடமே, 10 அல்லது 20 ரூபாய் நோட்டை வாங்கி, அதில் உள்ள
நம்பரை குறிப்பெடுப்பார். அந்த நம்பரை, தெருவில் நிற்கும் மற்றொரு பாக முகவரிடம் கூறி, எத்தனை ஓட்டு என, மொபைல் போன் வழியாக கூறுவார்.வாக்காளர், அடையாள குறியீடு ரூபாய் நோட்டை காட்டி உறுதி செய்து, பணத்தை பெற்று கொள்வார். அந்த முகவரிடம், 20 ஓட்டுக்கான பணம் தான் இருக்கும்.
பணம் காலியானதும், மற்றொரு பாக முகவர், வேறு ஒரு இடத்தில் நிற்பார். அவரிடம் இருந்து, தேவைக்கு ஏற்ப பணத்தை வாங்கி வைத்து கொள்வார்.

இப்படி, ஐந்து பேர் குழுவாக பிரித்து, பட்டுவாடா செய்கின்றனர். இதன் மூலம், பறக்கும் படையிடம் சிக்காமல் பணம் வினியோகம் செய்ய முடியும். அப்படியே சிக்கினாலும், குறைந்த பணம் மட்டுமே இருப்பதால், செலவுக்கான பணம் என கூறி தப்ப முடியும்.பொருள் கேட்கும் வாக்காளர்களுக்கு, குறிப்பிட்ட கடைக்கு சென்று, இதே போல் ரூபாய் நோட்டில் உள்ள குறியீடு நம்பரை கூறி, விருப்பமான பொருள் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'‛கூகுள்- பே'
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, 47வது வார்டில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர், சாய்கணேஷின் ஆதரவாளர்கள், அந்த வார்டில் உள்ள அந்தோணி பிள்ளை தெருவில், வீடு வீடாக சென்று, வாக்காளர் விபரங்களை குறிப்பெடுத்து கொண்டிருந்தனர்.இதை கண்ட, அப்பகுதியினர் அவர்களிடம் விசாரிக்க முயன்றபோது, அங்கிருந்து தப்பினர். எனினும், அங்கு வசிப்பவர்களிடம் இது பற்றி விசாரித்தபோது, அவர்களுக்கு, 'கூகுள்-பே' வாயிலாக, பணம் வினியோகம் செய்யப்பட்டதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
பட்டுவாடாவை தடுக்க 90 தேர்தல் பறக்கும் படை
'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 19ம் தேதி, சென்னையில் 18 ஆயிரம் போலீசாரும், போலீசார் அல்லாத ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் 4,000 பேர் என, 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என, சென்னை போலீஸ் கமிஷனர், சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள 'அம்மா மாளிகை'யில், தேர்தல் பறக்கும் படையினருடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் உள்ள, பறக்கும் படையினரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளோம். சென்னையில் இதுவரை, 45 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நாளை முதல் ஓட்டுப்பதிவு முடியும் வரை, ஒரு மண்டலத்தற்கு ஆறு படையினர் என, 90 தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுகின்றனர். அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்படும். தேர்தல் விதிமீறல்கள், பணப்பட்டுவாடா குறித்த புகார் அளிக்க, 1800 425 7012 என்ற, இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் வந்தவுடன் பறக்கும் படையினர் விரைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை, தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக 59 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வரும் 18ம் தேதி, வேட்பாளர்கள் முன்னிலையில், 5,794 ஓட்டுச்சாவடிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 27 ஆயிரத்து, 812 பேருக்கு, குலுக்கல் முறையில் அவர்கள் பணியாற்றும் ஓட்டுச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்படும். சென்னையில் இதுவரை, 1.45 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தற்போது வரை தேர்தல் பணிகள் அமைதியாக நடந்து வருகிறது. தொடர்ந்து, தேர்தல் முடியும் வரை அமையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், 4,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாளான, 19ம் தேதி, 18 ஆயிரம் போலீசாரும், போலீசார் அல்லாத ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் 4,000 பேர் என, 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.