சண்டிகர்: காங்கிரஸ் தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
பஞ்சாபில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பர்னாலாவில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: என்ன நடந்தாலும், காங்கிரசின் தலைவரை ஒரு பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது. துடைப்பம் கட்சியின் (ஆம்ஆத்மி கட்சியின் சின்னம்) மிகப்பெரிய தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம். அதுதான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலின்போது, பஞ்சாபின் மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தான் பயங்கரவாதியின் வீட்டில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இரவு தங்கியிருந்ததை குறிப்பிட்டு ராகுல் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். அவர் மேலும் பேசியதாவது: அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு தேடுபவர்கள், பஞ்சாப் மாநிலத்தை சிதைத்துவிடுவர். ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களுக்கு வாக்குறுதி அளிப்பவர்கள் பஞ்சாபை அழித்து விடுவார்கள். என் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.
பஞ்சாப் ஒரு எல்லை மற்றும் உணர்வுபூர்வமான மாநிலம், காங்கிரஸ் கட்சி மட்டுமே பஞ்சாபை புரிந்து கொண்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும். அமரீந்தர் சிங் ஒரு ஏழையைக் கட்டிப்பிடிப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர் அவ்வாறு செய்வதை நான் பார்த்ததில்லை. அமரீந்தர் சிங்குக்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்ததால், அவரை காங்கிரஸ் கட்சி நீக்கியது. இவ்வாறு அவர் பேசினார்.