கிருஷ்ணகிரி: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருவதாகவும், பொம்மைக்கு கீ கொடுத்தால் கை தட்டுவது போல, அதிகாரிகள் எழுதி கொடுப்பதை படித்து வருவதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக மக்களுக்காக 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை சட்டசபை தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அறிவித்தார். அதையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் தற்போது காணொலியில் அவர் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதிமுக மக்களுக்காக உழைக்கும் கட்சி. அதிமுக வேட்பாளர்கள் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பார்கள். எனவே அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
திமுக ஒரு கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. வடநாட்டில் இருந்து ஏஜெண்ட்டை இறக்கி தேர்தலில் வெற்றி பெற்றார்கள், கவர்ச்சியான விளம்பரங்களை கூறி வெற்றி பெற்றது திமுக. ஆனால் அதிமுக.,வோ எதை செய்ய வேண்டுமோ அதை கூறியது. நாங்கள் சொன்னதை செய்தோம், சொல்லாததையும் செய்தோம். அதிமுக.,வில் சாதாரண தொண்டன் கூட, எம்எல்ஏ, எம்.பி., முதல்வராக கூட ஆகலாம். திமுக.,விற்கு வாக்களித்தவர்கள் தங்களது தங்க நகைகளை பறிகொடுத்தது தான் மிச்சம்.

நீட் விவகாரத்தில் விவாதம் செய்ய தயார் என்று நான் கூறினேன். அதற்கு இதுவரை திமுக.,விடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். பொம்மைக்கு கீ கொடுத்தால் கை தட்டுவது போல, அதிகாரிகள் எழுதி கொடுப்பதை படித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பொங்கலுக்கு ரூ.2,500 பரிசாக கொடுத்தோம், ஆனால் முதல்வர் ஸ்டாலின் பொங்களுக்கு என்ன கொடுத்தார்?. அவர் கொடுத்த 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றவை; அதில் ரூ.500 கோடி ஊழலை திமுக அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.