சென்னை: 'சென்னையில், வேட்பாளர்கள் ஓட்டியுள்ள போஸ்டர்களை, உடனடியாக அகற்றா விட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு, 5,794 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமரா வாயிலாக ஓட்டுப்பதிவை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, ரிப்பன் மாளிகை வளாக, 'அம்மா மாளிகை'யில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள, 45 தேர்தல் பறக்கும் படை வாகனத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு அலுவலர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.பின், ககன்தீப் சிங் கூறியதாவது: சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், ஏற்கனவே, 45 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், கூடுதலாக, 45 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு, 90 குழுக்குள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. காலை, இரவு நேரங்களில், வாக்களர்களுக்கு பணம் கொடுக்க வாய்ப்புள்ளதால், பறக்கும் படை ஒரே இடத்தில் இல்லாமல், தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில், 1.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்கள், பரிசு பொருட்கள் வினியோகம் போன்றவை குறித்து, 1800 425 7012 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஏற்கனவே, 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் இருந்தே, சுவரொட்டிகள் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில், வேட்பாளர்கள், தங்களுக்கு ஆதரவாக போஸ்டர், ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். அதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ள போஸ்டர்கள், ஸ்டிக்கர்களை அவர்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில், சுவரொட்டிகளை அகற்றுவதற்கான செலவின தொகை, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும். அதன்படி, ஒரு வேட்பாளருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். இதனால், வேட்பாளரின் செலவு கணக்கு, 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல்ஆகும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி இழக்கச் செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே, வேட்பாளர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. தேர்தல் பிரசாரம் முடிந்துள்ளதால், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, சென்னையில் அனுமதியில்லை. தேர்தல் பணியில், 27 ஆயிரம் அலுவலர்கள், 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.