"பிரசார கூட்டங்களுக்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக வருகிறீர்கள். ஆனா தேர்தலில் கவுத்து விடுகிறீர்கள். கோவை மக்களை நம்பவே மாட்டேன்,'' என தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார்.
கோவை கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி நேற்று சுந்தராபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த முறை கோவையில் பிரசாரம் மேற்கொண்டபோதும், மக்களின் வரவேற்பு இதைவிட அதிகமாக இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எனவே கோவை மக்களை நம்பவே முடியாது.
இந்த முறை ஏமாற்றாமல் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். கடந்த ஒன்பது மாத ஆட்சியில், 10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செய்திருக்கிறார்.
இதேபோல் பெண்களுக்கு, ஆயிரம் ரூபாய் தரும் திட்டம் நிதி நிலைமை சரியான பிறகு கண்டிப்பாக நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, சட்டமன்றத்தை முடக்க போவதாக சொல்கிறார். அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. மாறாக, அவர் சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு, அவர் பேசினார்.