தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: நீதிமன்றங்களை பார்த்து கூட, பிரதமர் மோடி பயப்படுவதில்லை. ஆனால், ஸ்டாலினையும், தி.மு.க., - எம்.பி.,க்களையும் பார்த்து, பிரதமர் மோடி பயப்படுகிறார் என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நீதிமன்றங்கள் நியாயம் வழங்குவதால், மோடி பயப்படுவதில்லை. ஆனால், மற்றவர்களின் ஊழலால், தி.மு.க.,வினரின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளால், நாட்டின் வளர்ச்சிக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து வந்து விடுமோ என மோடி நினைக்கிறாரோ? அது பயம் அல்ல; எச்சரிக்கை. பயப்பட வேண்டியது நீங்கள் தான்.
'மோடி யாரை பார்த்தும் பயப்படலை... அவரை பார்த்து தான் எல்லாரும் பயப்படுறாங்க'ன்னு வழக்கமான அரசியல்வாதிகள் மாதிரி வழவழ, கொழகொழான்னு பதிலடி தராம, ஆக்கப்பூர்வமா சிந்திச்சு தந்த இந்த விளக்கம் ரொம்பவே அருமை...!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் அறிக்கை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படவில்லை. அந்த ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல கோரிக்கை தான்... அது சரி... தமிழகம் முழுக்க, உள்ளாட்சி தேர்தல் களம், அனல் பறந்துட்டு இருக்குது... அகில இந்திய கட்சியான உங்க கட்சியும், நீங்களும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க...?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அறிக்கை: 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைத்தால், தமிழகம் முழுதும் தி.மு.க., கொண்டாடி மகிழும். கிடைக்கவில்லை என்றால், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மாநில சுயாட்சியை, மத்திய அரசு குழி தோண்டி புதைக்கிறது என, வர உள்ள லோக்சபா தேர்தலில், ஓட்டு அரசியலை நடத்தும். ஆக, நீட் தேர்வு விலக்கு கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும், தி.மு.க.,வுக்கு லாபம் தான். ஆனால், மருத்துவர் கனவோடு இருக்கும், மாணவர்களின் நிலை தான் அந்தோ பரிதாபம்.

என்னங்க இது... எதிர்க்கட்சி வரிசையில இருந்துட்டு, ஆளுங்கட்சிக்கு லட்டு மாதிரி இப்படி ஒரு ஐடியாவை எடுத்து கொடுக்குறீங்களே... தி.மு.க.,வினரே கூட இப்படி மாத்தி யோசிச்சிருக்க மாட்டாங்க போங்க...!
தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி பேச்சு: சேலம் மாவட்ட மக்களை நம்பவே முடியாது. எழுச்சியுடன் வரவேற்பு கொடுப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற்றது; 10 தொகுதிகளில் ஏமாற்றி விட்டீர்கள். இது தவறு தானே. மீண்டும் இந்த தவறு செய்து, திரும்பவும் ஏமாற்றி விடாதீர்கள்.
உங்களுக்கு ஓட்டு போடாதவங்க எல்லாம் தப்பு செஞ்சவங்களா...? உங்க தாத்தா கருணாநிதியும் இப்படித் தான், தனக்கு ஓட்டு போடாதவங்களை, 'தமிழன் இன்னும் சொரணை கெட்ட ஜென்மமா, சோற்றால் அடித்த பிண்டமாக இருக்கிறான்'னு திட்டுவார்... அவரது வாரிசுங்கிறதை அடிக்கடி நிரூபிக்கிறீங்களே...!