புதுடில்லி: மத்தியில் ஆளும் பா.ஜ.,விற்கு அடி பணிந்து போகாததால் தான், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் துன்புறுத்தலை சந்திக்கிறார் என காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.
பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 1991 முதல் 1996 வரை ஒருங்கிணைந்த பீஹாரின் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிதில், 950 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கனவே நான்கு வழக்குகளில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். டோரண்டா கருவூலத்தில் ரூ.139.35 கோடி மோசடி தொடர்பான ஐந்தாவது வழக்கிலும், லாலு பிரசாத் உட்பட 75 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவருக்கான தண்டனை வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தங்களுக்கு தலைவணங்காதவர்கள் துன்புறுத்தலை சந்திப்பார்கள் என்பது தான் பா.ஜ.,வின் முக்கிய அரசியல் கொள்கையாக உள்ளது. அரசியலில் சமரசம் செய்ய தெரியாததால் தான், லாலு பிரசாத் குறி வைக்கப்படுகிறார். அவருக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE