கோலார்:பிறந்த நாள் பரிசு வாங்கி தருவதாக கூறி, 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை நால்வர் சேர்ந்த கும்பல், வனப்பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு கற்பழிப்பு செய்த சம்பவம், கோலாரின் காமசமுத்திரத்தில் நடந்துள்ளது.
கோலார் மாவட்டம், பங்கார்பேட் தாலுகா காமசமுத்திரம் பகுதியை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு, நேற்று முன்தினம் பிறந்த தினம். தந்தை புத்தாடை வாங்கி கொடுக்கவில்லை என்று, நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதையறிந்த அவரது நண்பர் ஒருவர், 'பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி தருகிறேன் வா' என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அவர், தனது மூன்று நண்பர்களை வரவழைத்து, சிறுமியை காமசமுத்திரம் வனப்பகுதிக்கு துாக்கி சென்றுள்ளனர்.நள்ளிரவில் சிறுமியை கூட்டாக கற்பழித்துள்ளனர். அவரை வனப்பகுதியிலேயே விட்டு விட்டு, நால்வரும் தப்பியோடிவிட்டனர். மயக்கத்தில் இருந்த சிறுமி, நேற்று காலை எழுந்து, தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை நினைத்து கதறி அழுதுள்ளார்.
சற்று சுதாரித்து கொண்டு, வனப்பகுதியிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை தனியார் மருத்துவமனை யில் சேர்த்து விட்டு, போலீசில் புகார் செய்தனர்.இவ்விஷயம், மாவட்டம் முழுதும் நேற்று தீ போல் பரவியது.
காம கொடூரன்களை கைது செய்யும்படி வலியுறுத்தினர். போலீசார் சிறப்பு படைகள் அமைத்து, ஆனந்த்குமார், 25, காந்தராஜு 23, பிரவீன், 21, வேணு, 19, ஆகிய நால்வரை, கைது செய்தனர்.தகவலறிந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி., தேவராஜ், காமசமுத்திரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.