உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்

என்.சாண்டில்யன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியாவில் எல்லா மாநிலத்திலும், பா.ஜ.,வால் ஆளுமை செலுத்த முடிகிறது. ஆனால், தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை; காரணம், அவர்கள் வாலாட்டினால், வாலை ஒட்ட நறுக்கக் கூடிய ஆட்சி மற்றும் தி.மு.க., கூட்டணி இங்கு உள்ளது' என்று ரொம்பவும் தெனாவட்டாகப் பேசியிருக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
ஈ.வெ.ரா., அவதரித்த ஈரோடு மாவட்டத்திலேயே, சட்டசபை தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில், பா.ஜ., வெற்றி வாகை சூடியதே... அது என்னவாம்? தங்களின் சொந்த கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு, சட்டசபை தேர்தலை சந்திக்க திராணி, தெம்பு இல்லாத இந்த வெத்து வேட்டுகள், தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாது என்று கர்ஜனை செய்வது வெட்கக்கேடானது.

'தன்மானம், சுயமரியாதை, வெட்கம், சூடு சொரணை இவை அத்தனையும், தி.மு.க., நிர்வாகிகளுக்கு இருக்கக்கூடாது' என்றார், அக்கட்சியின் எம்.பி., - டி.ஆர்.பாலு. முதல்வர் ஸ்டாலின் போட்ட பிச்சையில், எம்.எல்.ஏ., - எம்.பி.,யாகி இருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும், பாலுவின் இந்தப் பேச்சு பொருந்தும் தானே? தோற்றாலும், ஜெயித்தாலும் கவலை இல்லை;
அதிக இடங்களில் போட்டியிட்டு வாகை சூடுவோம் என்ற தன்னம்பிக்கை, துணிச்சல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு இருக்கிறது. தனித்து போட்டியிடும் தைரியம், சீமான், கமல், தினகரன் போன்றோருக்கும் இருக்கிறது. அந்த துணிச்சல் மற்றும் திராணி வைகோ, கம்யூனிஸ்ட்கள், திருமாவளவனுக்கோ
இல்லையே... ஏன்?
சிறப்பான ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின் என்று, தம்பட்டம் அடிக்கிறார் திருமாவளவன். ஆனால், உதயநிதி, கனிமொழி தேர்தல் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம், 'பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னீங்களே; எப்போது அதை கொடுப்பீங்க?'ன்னு மக்கள் கேள்வி கேட்டு நாறடிக்கின்றனரே... இதற்கு
திருமாவளவன் என்ன பதில் சொல்வார்?
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி, தி.மு.க., என்பது உலகமே அறிந்த விஷயம். இதுவரை திராவிட கட்சிகளின் மாயையில் சிக்கிக் கிடந்த மக்கள், இப்போது விழித்துக் கொண்டுள்ளனர். அதை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சம் ஆக்கப் போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அந்த நல்ல காரியத்தை, தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும், அக்கட்சி உடன் பிறப்புக்களே கச்சிதமாக செய்து முடிப்பர் என்பதில், எங்களுக்கு, 'நோ டவுட்' திருமா. அதன்பின் நீங்கள் வாலாட்டவே முடியாதே; எப்புடி...!