நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ., தனது இடத்தை உறுதி செய்துள்ளது. ஆனால் அ.தி.மு.க., பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் 30 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்துடன் களமிறங்கிய பா.ஜ.,வுக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்தன.நகராட்சிகளான குளச்சலில் நான்கு, கொல்லங்கோடு, குழித்துறையில் தலா ஐந்து, பத்மனாபபுரத்தில் ஏழு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பத்மனாபபுரத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களை வளைத்து தலைவர் பதவியை பிடிக்க பா.ஜ.,வும், தி.மு.க.,வும் முயற்சிக்கின்றன.

51 பேரூராட்சிகளில் ஆறு பேரூராட்சிகளில் தலைவர் பதவியை பிடிக்கும் நிலை பா.ஜ.,வுக்கு உள்ளது. இரணியல் பேரூராட்சியில் அக்கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றது. பேரூராட்சிகளில் 168 வார்டுகள், நகராட்சி, மாநகராட்சியில் 32 வார்டுகள் என 200 வார்டுகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அ.தி.மு.க.,வின் நிலை பரிதாபமாகியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய அக்கட்சி இந்த முறை இரண்டு பேரூராட்சிகளில் தலைவர் பதவியை பிடிக்க சுயேச்சைகளின் ஆதரவை நாடி வருகிறது. பேரூராட்சிகளில் 64 வார்டுகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் அ.தி.மு.க.,வின் 24, பா.ஜ.,வின் 23 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.