சென்னை: தேசிய பங்கு சந்தையில் நடந்த ஊழல் தொடர்பாக, அதன் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனை, சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் சித்ரா ராமகிருஷ்ணா, 59; மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வசிக்கிறார். இவர், என்.எஸ்.சி.,எனப்படும் தேசிய பங்கு சந்தையில், 2013 -- 16 வரையிலான காலகட் டத்தில், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.ரூ.44 கோடி சம்பளம்அப்போது, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன், 58, என்பவரை, தேசிய பங்கு சந்தையின் ஆலோசகராக நியமித்தார்.
இதில் விதிமீறல்கள் நடந்து இருப்பதாக, 'செபி' எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, பல ஆண்டுகளுக்கு முன் குற்றம் சாட்டியது.எனினும், 2015ல், ஆன்ந்த் சுப்பிரமணியனுக்கு, தேசிய பங்கு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு அளித்தார், சித்ரா ராமாகிருஷ்ணா. ஆண்டுக்கு, 44 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத நபருக்கு, கோடிக்கணக்கில் சம்பளம் தரப்படுவதாக சர்ச்சை எழுந்தது.
தேசிய பங்கு சந்தையின்,கணினி கட்டுப்பாட்டு நிலையமான, 'சர்வர்' மையத்தை, டில்லியை சேர்ந்த தனியார் பங்கு சந்தை வர்த்தக நிறுவனம் ஒன்று முறைகேடாக கையாண்டதையும், 'செபி' அம்பலப் படுத்தியது.சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் கூட்டணி, மிகப்பெரிய அளவில் ஊழல்செய்துள்ளது என்றும், இதன் வாயிலாக குவித்த கோடிக்கணக்கான ரூபாயை, சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்றும் புகார் எழுந்தது.
'இ - மெயில்' தொடர்பு'
இமயமலை சாமியார் என்ற ஒருவரின் கைப்பாவையாக, சித்ரா ராமகிருஷ்ணா செயல்படுகிறார். வணிக திட்டங்கள்,சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசிய தகவல்களை, அந்த சாமியாருடன், 'இ - மெயில்' வாயிலாக பரிமாற்றம் செய்கிறார்.'அதில், கிளுகிளுப்பான விஷயங்களும் பேசப்படுகின்றன' என, செபி அமைப்பு ஆதாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர்.சமீபத்தில், மும்பை மற்றும் சென்னையில் உள்ள இவர்களது வீடுகளில், வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் செய்த ஊழல்கள் குறித்து, மும்பை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரித்தபோது, 'சாமியாருடன், இ - மெயில் தொடர்பு மட்டும் இருந்தது. அவரை நேரில் சந்தித்தது இல்லை' என தெரிவித்துள்ளார்.
'டிஜிட்டல்' ஆவணங்கள்
ஆனால், சி.பி.ஐ., அதிகாரிகளிடம், சாமியார் எனகூறப்படும் நபருடன், தீவு ஒன்றில் சித்ரா ராமகிருஷ்ணா கடலில் குளித்து, கடற்கரையில் ஓய்வு எடுத்தற்கான ஆதாரங்களை செபி அளித்துள்ளது.இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள், தேசிய பங்கு சந்தை அலுவலகம்சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான, 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள், சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்து, விமானத்தில் மும்பை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனை, 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த சாமியார் இவர் தானா?
சாமியார் என்ற போர்வையில் சித்ரா ராமகிருஷ்ணாவுடன், ரகசிய தகவல் பரிமாற்றம் நடத்தியது, ஆனந்த் சுப்பிரமணியன் தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இவரை தான், சித்ரா ராமகிருஷ்ணா, 'யோகி' என குறிப்பிட்டு, கிளுகிளுப்பு நாடகத்தை அரங்கேற்றினாரா அல்லது 'இமயமலை சாமியார்' என, வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சித்ரா ராமகிருஷ்ணாவும் விரைவில் கைது செய்யப்படுவார் என சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE