சென்னை : நகைச்சுவை நடிகர் செந்தில் வீட்டில், பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல், வாடகைதாரர்கள் தடுப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் செந்தில், 68, சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் வசிக்கிறார். அவருக்கு அதே பகுதியில், ஆறு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது; ஐந்து வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார்.சொந்த உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் பராமரிப்பு செய்ய, டிச.,26ல் குடும்பத்தினருடன் செந்தில் சென்றார். அப்போது, மற்ற வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, செந்தில் தரப்பில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்றதற்கான ரசீதை, போலீசார் வழங்கினர்.விசாரணையில், வீட்டின் உரிமையாளர் செந்திலுக்கும், வாடகைதாரருக்கும் ஏற்கனவே பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்து உள்ளது. போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.