மதுரை: மதுரை பரவை, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை ஊர்மெச்சிகுளம் கலா மீனா உட்பட 8 பேர் தாக்கல் செய்த மனு:பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நாங்கள் அ.தி.மு.க., சார்பில் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க., 6, சுயே.,1 கவுன்சிலர்கள் வென்றுள்ளனர்.
பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்ற வாய்ப்புள்ளது. அவற்றை ஆளுங்கட்சியினர் கைப்பற்றும் நோக்கில் எங்களுக்கும், குடும்பத்தினருக்கும் சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். 'குதிரை பேரத்தில்' ஈடுபட தடுத்து வைக்க வாய்ப்புள்ளது.
சமயநல்லுார் டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்தோம். எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சாலை பொன்னம்மா உட்பட 9 பேர், 'அன்னவாசல் பேரூராட்சியில் அதிக வார்டுகளை அ.தி.மு.க., கைபற்றியுள்ளது. தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றும் நோக்கில் இதர கட்சியினரால் மிரட்டல் வருகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தனர்.
அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'மனுதாரர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்றார்.