மாஸ்கோ : உக்ரைனுக்கு எதிரான போரில், நேற்று ரஷ்ய படைகள் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தின. ''எங்கள் நாட்டுக்கு எதிரான சண்டையில், உக்ரைன் மக்களை மேற்கத்திய நாடுகள் கேடயமாக பயன்படுத்துகின்றன. அவர்களின் ராணுவ அச்சுறுத்தலில் இருந்து எங்கள் நாட்டை பாதுகாக்கவே தாக்குதலை தொடர்கிறோம். குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை போர் தொடரும்,'' என, ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கேய் ஷாய்கு நேற்று தெரிவித்தார். இதன் வாயிலாக,
உக்ரைன் மீதான பிடியை ரஷ்ய ராணுவம் மேலும் இறுக்கி உள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பின், ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம் பெற்றுள்ள, 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பில் இணைவதற்கு, உக்ரைன் முயற்சித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகரான கீவை கைப்பற்ற, ரஷ்ய படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே அண்டை நாடான பெலாரஸ் எல்லையில், இருதரப்பு பிரதிநிதிகள் இடையே, நேற்று முன் தினம் நடந்த ஐந்து மணி நேர அமைதி பேச்சில் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், அமைதி பேச்சு இன்று மீண்டும் நடக்கவுள்ளது. நேற்று முன்தினம் அமைதி பேச்சு முடிவடைந்த உடன், ரஷ்ய படைகள் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தன. கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் வெடி சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது.கீவ் நகரில் மத்திய பகுதியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் ரஷ்ய படைகள் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பீரங்கிகள் மற்றும் போர் தளவாட வாகனங்கள் 65 கி.மீ., துாரம் வரை வரிசைகட்டி நிற்பது, செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக கண்டறியப்பட்டது.நேற்று ஆறாம் நாளாக தொடர்ந்த போரில், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரகமான கார்கிவ் மீது, ரஷ்யா பயங்கர தாக்குதல்களை நடத்தியது. நகரின் மையப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதை, செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
கீவ் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராணுவ தளம் மீது ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிந்து தகர்த்தது. நகரின் மையப்பகுதியில் உள்ள நிர்வாக தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கெர்சன் நகரிலும் ரஷ்ய விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. கீவ் நகரில் உள்ள உலகின் மிக உயரமான டிவி கோபுரம் ஒன்றின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:வெளிப்படையான, ஒளிவுமறைவு இல்லாத பயங்கரவாதத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. போர் குற்றம் புரிந்து வரும் ரஷ்யாவுக்கு மன்னிப்பே கிடையாது. ரஷ்ய கூட்டமைப்பின் அரச பயங்கரவாதத்தை மறக்க மட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கேய் ஷாய்கு நேற்று கூறியதாவது:உக்ரைனின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தகர்த்து வருகிறோம். மிக துல்லியமாக இலக்கை தாக்க கூடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில செய்தி நிறுவனங்கள் கூறுவதைப் போல, மக்கள் குடியிருக்கும் பகுதிகள், மருத்துவமனை, பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை.மேற்கத்திய நாடுகள், எங்களுக்கு எதிராக உக்ரைனை கேடயமாக பயன்படுத்தி வருகின்றன. அவர்களின் ராணுவ அச்சுறுத்தலில் இருந்து எங்கள் நாட்டை பாதுகாக்கவே நாங்கள் தாக்குதல் நடத்தி வருகிறோம். குறிப்பிட்ட இலக்கை எட்டும் வரை போர் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய துாதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்!
கர்நாடகா மாணவர் நவீன் உயிரிழந்த தகவல் உறுதியானதும், இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் டெனிஸ் அலிபோவ், துணை துாதர் ரோமன் பாபுஷ்கின் ஆகியோரை நேரில் அழைத்து, வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுக்கான உக்ரைன் துாதர் இகோர் போலிகாவை அழைத்து, இந்திய மாணவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
ரஷ்யாவுக்கான இந்திய துாதர் பவன் கபூர், உக்ரைனுக்கான இந்திய துாதர் பார்த்தா சத்பதி ஆகியோர் அந்தந்த நாட்டு அரசுகளை தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவுமாறு வலியுறுத்தினர்.
கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேறினர்
வெளியுறுவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கார்கிவ், சுமி உட்பட, பதற்றம் நிறைந்த உக்ரைன் நகரங்கள் குறித்து கவலையுடன் இருக்கிறோம்.இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர அடுத்த மூன்று நாட்களில் 26 விமானங்கள் செல்கின்றன. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.புகாரெஸ்ட் மற்றும் புடாபெஸ்ட் விமான நிலையங்கள் மட்டுமின்றி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கிய குடியரசு நாடுகளில் உள்ள விமான நிலையங்களும் இந்தியர்களை அழைத்து வர பயன்படுத்தப்பட உள்ளன.உக்ரைனின் கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.