கோவை : புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, புதிய கடன் திட்டங்களை வழங்க வேண்டும் என, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]()
|
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் தொழில்துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, அவரை சந்தித்து கோவை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து, பரிந்துரையை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, புதிய கடன் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மீண்டும் தொழில் தொடங்க பிணையில்லா கடன் தொகை வழங்க வேண்டும்.
![]()
|
இந்த தொழில்துறையினருக்கான கடன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். கோவை -- மதுரை, கோவை -- கரூர், கோவை -- ஒசூர் தொழில் வழித்தடங்களை அறிவிக்க வேண்டும். கொச்சி எல்லை ரோடு, -பல்லடம் முதல் மதுக்கரை வரையில் உள்ள ரோடுகளை, நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். எல் அண்ட் டி பைபாஸ் சாலையை, நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 6 வழி சாலையாக மாற்ற வேண்டும்.
கணபதி முதல் சரவணம்பட்டி வரை, உயர் மட்ட சாலை அமைக்க வேண்டும். கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலிக்கு, இரவு நேர புல்லட் ரயில் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement