சென்னை: ''உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக, இளமையாக இருக்கிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில், சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி, முதல்வர் பேசியதாவது:இந்த ஆண்டு என் வயது, 69. இதை கூறினால் சிலர் நம்ப மாட்டார்கள். அதற்கு காரணம், உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை, முறையாக செய்து வருகிறேன். என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், உங்களை சந்திக்கும்போது, ஐந்து வயது குறைந்து விடுகிறது.

இந்தப் பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டு வரும்போதும், ஒவ்வொரு பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்துள்ளேன். ஆனால், எப்போதும் இந்த பொறுப்புகளைப் பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. உங்களில் ஒருவனாக என்றைக்கும் இருக்கிறேன். அதுதான் யாராலும் பிரிக்க முடியாதது. பதவி என்பது வரும் போகும்; அது வேறு. உங்கள் வாழ்த்துகளோடு என்னுடைய பயணம் தொடரும்; என்னுடைய பணி நிறைவேறும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
Advertisement