திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் தேர்வில் யார் கை ஓங்குகிறது என்பது நாளுக்கு நாள் மாறி வருகிறது. அ.தி.மு.க.,வினரை வளைப்பதன் மூலம் மத்திய மாவட்ட செயலாளர் தன் இருப்பை பலப்படுத்தி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகளில் தி.மு.க., கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 19 வார்டுகளையும், பா.ஜ., மற்றும் சுயே., தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். அதிக இடங்களில் வெற்றி பெற்ற, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., மேயர் பதவியை பெறுவது உறுதியாகி உள்ளது. இதனால், தி.மு.க.,வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேயர் பதவி கேட்டு வரிசையில் உள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தான் போட்டியிட்ட வார்டில் கட்சியில் எதிர் கோஷ்டியின் உள்ளடி வேலை, அ.தி.மு.க.,வின் பிரமாண்ட செலவு என பல எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெற்றதோடு, சீனியர் அரசியல்வாதி; வயது முதிர்வு; இதற்கு பின் இனி எந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கேட்க போவதில்லை என காரணங்களை அடுக்கி மேயர் பதவியை கேட்டுள்ளார். இவருக்கு அமைச்சர் துரை முருகன் ஆதரவு உள்ளது.

உதயநிதியுடன் தொடர்பு
தி.மு.க., வில் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன் மேயராக வேண்டும் என அந்த தரப்பு மேலிடத்தை அணுகியுள்ளது. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் தொகுதியில் அடங்கிய, மாநகராட்சியின் 10 வார்டுகளிலும் இக்கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வார்டுகளில் கட்சி தலைமை தேர்தல் செலவுக்கு கொடுத்த நிதியை திரும்ப கொடுத்து விட்டு, பத்மநாபன் தரப்பு முழு செலவையும் ஏற்றுள்ளது.
திருப்பூர் வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார், முந்தைய பல்வேறு தேர்தல்களில் பங்கெடுத்து முதன் முறையாக இந்த வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவரது மனைவியும், உதயநிதியின் மனைவியும் நெருங்கிய தோழிகள். அந்த அடிப்படையில் இவருக்கு உதயநிதி தரப்பில் ஆதரவு உள்ளது.
செல்வராஜின் 'ஆடுகளம்'
இது தவிர மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ் தனது ஆதரவாளர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோரை தனது தரப்பில் மேயர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார். மாநகராட்சி தேர்தலில் செல்வராஜ், கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில் அடங்கிய 50 வார்டுகளில் வார்டுகளில் 23 வார்டுகளில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியுற்றனர். இதையடுத்து அவர் தற்போது அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களை கட்சிக்கு இழுக்கும் பணியை துவங்கி விட்டார்.

முதல் கட்டமாக நேற்று ராதாகிருஷ்ணன் இணைந்தார். மேலும் ஆறு பேருக்கு அவர் வலை விரித்துள்ளதாகவும், மேயர் தேர்தலுக்கு முன்னரேல அவர்கள் தி.மு.க.வில் இணைக்கப்படுவர் என்றும் தகவல் உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் மேயர் தேர்வில் அவர் தனது செல்வாக்கை சரிக்கட்டுவார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கூவத்துார் 'பார்முலா'இன்று தெரியும்?
ஒருவேளை அ.தி.மு.க.,வில் இருந்து வெற்றி பெற்ற சிலரை, தி.மு.க., இழுக்கும் பட்சத்தில் அவர்களை பாதுகாப்பாக வேறிடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக, நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, கூவத்துார் பாணியில், ஏதாவது மலை வாசஸ்தலம் அல்லது கர்நாடகா, கேரள மாநிலத்துக்கும் கூட, கொண்டு சென்று 'கடத்தி' வைக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிகிறது.மேயர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் வரை, திருப்பூர் வடக்கு, மத்திய மாவட்ட தி.மு.க.,வினர் மத்தியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்பது மட்டுமே தற்போதைய உண்மை.